'சென்னையில் அதிகரிக்கும் கொரோனா...' 'ஒரு ஏரியால 3 பேருக்கு இருந்துச்சுன்னா, உடனே அந்த பகுதியை...' - சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாகவும், ஒரு தெருவில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் மக்களின் அலட்சியத்தால் மீண்டும் சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,373 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 1,269 தெருக்களில் ஒருவரும், 74 தெருக்களில் 2 பேரும் 20 தெருக்களில் 10 பேரும், 10 தெருக்களில் 3-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஒரு தெருவில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மேலும் முன்பை போல வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்றும், பாதிக்கப்பட்டோர் வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீண்டும் கொரோனா பரவலை தடுக்க, தெருவில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தியாகராய நகரில் ஆய்வு மேற்கொண்ட போது, முகக்கவசம் அணியாமல் உலாவந்த 20க்கும் மேற்பட்டோரிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தலா 200 ரூபாய் அபராதம் விதித்தார். முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணிடம், பணம் இல்லாததால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தன் சொந்த பணத்தை அப்பெண்ணுக்கு கொடுத்து அபராதம் செலுத்த உதவியுள்ளார்.