‘மீண்டும் இ-பாஸ் கட்டாயம்’!.. ஆனா இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களிலிருந்து வருவதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து, இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் இ-பாஸ் பெற வேண்டும். இதில் கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோருக்கு மட்டும் இ-பாஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக காரணங்களுக்காக தமிழகம் வந்து 72 மணிநேரம் வரை மட்டுமே தங்கியிருப்போரை, வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. வெளிநாடுகளிலிருந்து வருவோர், தங்களது பயணத்திட்டம் மற்றும் கடந்த 14 நாட்களுக்கு மேற்கொண்ட பயணம் ஆகிய விவரங்களை வலைதளத்தில் பதிவிட வேண்டும். பயணம் மேற்கொள்வதற்கு முந்தைய 72 மணிநேரத்துக்குள் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பதிவேற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
