'நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க சந்தோசமா இருப்போம்'... ரிலையன்ஸ் பணியாளர்களுக்காக 'நீடா அம்பானி' எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் ஒரு ஆட்டம் காட்டிய கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. பலரது உயிரைக் காவு வாங்கியது மட்டுமல்லாது, பெரும் பொருளாதார சரிவையும் ஏற்படுத்தியது. இந்தச்சூழ்நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரக்கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது.
அதைத்தொடர்ந்து 16-ந் தேதி முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி இதன் இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய்களுடன் போராடும் 45-59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இந்தக் கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனையில் இலவசமாகப் போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ரிலையன்ஸ், தங்களது குழுமத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கான கொரோனா தடுப்பூசி செலவை தாங்களே ஏற்பதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், நிறுவனருமான நிடா அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ரிலையன்ஸ் நிறுவனம் உங்களுக்கும், உங்கள் துணைக்கும், குழந்தைகளுக்கும், பெற்றோருக்குமான தடுப்பூசி செலவை ஏற்கிறது. மத்திய அரசின் கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டத்தில் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பதிவு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தின் நலன் எங்களின் பொறுப்பாகும். தங்கள் குடும்பத்தின் நலன் மற்றும் மகிழ்ச்சியில் நாங்கள் மகிழ்கிறோம். நீங்கள் ரிலையன்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதி. நீங்கள் ரிலையன்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதி'' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தடுப்பூசி செலவை ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்பதன் மூலம் 19 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.