‘அப்பா.. தொண்டை வறண்டு போச்சுப்பா’.. கண்கலங்க வைத்த விழுப்புரம் சிறுமியின் ‘இறுதி’ நிமிடங்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் சிறுமி இறப்பதற்கு முன் கொடுத்த மரண வாக்குமூலம் அனைவரின் மனதையும் ரணமாக்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அடுத்த சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ராஜி. இந்த தம்பதியினரின் மூத்த மகள் ஜெயஸ்ரீ (15) உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியப்பெருமாள் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ இறுதியாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் மனதையும் ரணமாக்கியது.
அதில், சிறுமி ஜெயஸ்ரீயை வீடியோ எடுப்பவர் ‘உன் பேரு என்னம்மா?’ என கேட்க, அதற்கு ‘அண்ணா.. தண்ணி குடுங்கண்ணா..’ என ஜெயஸ்ரீ வலியுடன் தண்ணீர் கேட்கிறார். மீண்டும் அவர் ‘தண்ணீர் குடுப்பாங்க.. உனக்கு எப்டி ஆச்சு இப்டி?’ என கேள்வி கேட்க, உடனே ஜெயஸ்ரீ ‘அப்பா... அப்பாவ்.. அந்த யாசகனும் அந்த முருகனும் கொளுத்திட்டாங்கப்பா..’ என சொல்லி ‘தண்ணி தாயேன்பா..’ என மீண்டும் தண்ணீர் கேட்கிறார்.
அப்போது வீடியோ எடுப்பவர், ‘எதுக்கு உன்னை இப்டி செய்தார்கள். எப்டி எரிச்சிக்கிட்ட?’ என கேட்க, ‘கையெல்லாம் கட்டிப் போட்டுட்டாங்கப்பா..’ என சிறுமி பதிலளிக்கிறார். அப்போது அவர் ‘எதுக்கு கையை கட்டிப் போட்டாங்க?’.. என கேட்க ‘அய்யோ.. தண்ணி தாங்க’ என அழுதுகொண்டே சிறுமி ஜெயஸ்ரீ இருமுகிறார். மீண்டும் வீடியோ எடுப்பவர் ‘தண்ணி குடுப்பாங்கம்மா.. எப்டி கட்டிப் போட்டாங்க’ என கேட்க ‘அப்பா.. தொண்டைலாம் வறண்டு போச்சுப்பா’ என சிறுமி அழுகிறார்.
வீடியோ எடுப்பவர் மறுபடியும் எதுக்கு கட்டிப்போட்டார்கள் என கேள்வி கேட்க, ‘தண்ணி தந்தாதானே பேச முடியும். எப்பாவ் கொஞ்சூண்டு தாங்களேன்’ என அழுகுரலில் கெஞ்சுகிறார். வீடியோ எடுப்பவர் ஒரு மூடியில் தண்ணீர் கொடுங்கள் என அங்கிருந்த செவிலியரிடம் கூறினார். அப்போது ‘நிறைய தண்ணி தாங்க’ என சிறுமி ஜெயஸ்ரீ மெல்லிய குரலில் கேட்கிறார்.
தண்ணி குடித்ததும், ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என சிறுமி கேட்டார். அப்போது மீண்டும் ‘எதற்கு கட்டிப் போட்டார்கள்’ என வீடியோ எடுப்பவர் கேட்டார். அதற்கு ‘ஏற்கனவே சண்டை. எங்க அப்பாவுக்கும், அவங்களுக்கும்’ என ஜெயஸ்ரீ பதிலளித்தார். அப்போது ‘நீ ஏன் அதற்கு கொளுத்திகிட்ட’ என அவர் கேட்க, ‘நான் இல்லை. அந்த முருகனும், யாசகனும்தான் என்னை கொளுத்துனாங்க. பெட்ரோலை எடுத்து ஊத்திட்டாங்க’ என சொல்லி கடைசியாக ‘அப்பா ரொம்ப தண்ணி தாகம் எடுக்குதுப்பா...’ என்ற வார்த்தையுடன் தனது இறுதி மூச்சை நிறுத்துக்கொண்டார் சிறுமி ஜெயஸ்ரீ.
சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதன் விளைவாக, தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.