தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.. யார் யாருக்கு என்ன துறை.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில், உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், உதயநிதி ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையையும் கவனிக்க இருக்கிறார்.
முன்னதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு தற்போது மாசுக்கட்டுப்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த இ.பெரியசாமி, ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பன் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
வனத்துறை அமைச்சராக இருந்த கா.ராமச்சந்திரனுக்கு தற்போது சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல டாக்டர் எம். மதிவேந்தன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த நிலையில் தற்போது வனத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்கிறார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த சு.முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஊரக வீட்டு வசதி, நகர அமைப்பு திட்டமிடுதல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகர திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பனுக்கு தற்போது கதிர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருந்த ஆர்.காந்தி-க்கு கூடுதலாக பூதான மற்றும் கிராம தானம் துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே.சேகர்பாபு-க்கு தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் என்ற கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக இருக்கும் முனைவர் பழனிவேல் தியாகராஜன்-க்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால நன்மைகள் மற்றும் புள்ளியல் துறையும் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 34 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் தற்போது முதன்முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
