தமிழகத்தில் இயங்கிய போலி வங்கிகள்..?? 9 ஊர்களில் ரெய்டு.. காவல் ஆணையர் அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் போலி வங்கியை நடத்திவந்த கும்பலை கைது செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நூல் இன்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தமிழகத்தில் செயல்பட்டு வந்த போலி வங்கிகள் குறித்தும் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"ரிசர்வ் வங்கியில் இருந்து எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதன்படி ஊரக மற்றும் வேளாண் விவசாயிகள் கூட்டுறவு வங்கி எனும் பெயரில் போலியான வங்கி செயல்பட்டு வருவதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகம் முழுவதும் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்" என்றார்.
மேலும், ஒரு வருட காலமாக சென்னை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல் என 9 இடங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் திறக்கப்பட்டு அவற்றின் மூலமாக தினந்தோறும் 70 லட்ச ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்று வந்திருப்பதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,"ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி, உரிமம் எதையும் பெறாது இந்த வங்கியின் கிளைகள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தின் மதுரை, விருத்தாசலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட இந்த வங்கி கிளைகள் அதிரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களின் 56 லட்சத்துக்கும் மேலான இருப்புத்தொகை, 3000 சேமிப்பு கணக்குகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன." என்றார்.
மேலும், இந்த போலி வங்கியானது தனியார் வங்கியிடம் இருந்து கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன்மேல் ஸ்டிக்கர் ஒட்டி போலி கிரெடிட் கார்டுகளையும் வழங்கிவந்ததாக தெரிவித்த காவல் ஆணையர், "போலி வங்கி நடத்தி வந்தது தொடர்பாக இதுவரை 46 பேரை கைது செய்துள்ளோம். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
பொதுமக்கள் இம்மாதிரி போலி வங்கிகள், இணையதளத்தில் கிடைக்கும் போலி இணைப்புகள், அலைபேசிக்கு வரும் மோசடி செய்திகள் ஆகியவற்றில் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் ஆணையர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.