'இந்த சின்ன விஷயத்துக்கு கூட அனுமதி இல்லை'!.. கடுமையான குவாரண்டைன்!.. இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து கெடுபிடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணிக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 18ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணி வீரர்கள், நேற்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைந்தனர்.
லண்டன் சென்று இறங்கிய அவர்கள், சுவாத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதான ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக இங்கிலாந்தில் 14 நாட்கள் மிக கண்டிப்பான குவாரண்டைனில் வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே இந்திய வீரர்கள் இந்தியாவில் குவாரண்டைனில் இருந்ததால் இங்கிலாந்தில் 10 நாட்கள் மட்டும் குவாரண்டைன் இருக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய போட்டிக்கு இந்திய அணி பயிற்சி எடுக்க காலம் வெண்டும் என்பதால் 10 நாட்கள் மட்டும் குவாரண்டைன் விதிக்கப்பட்டுள்ளது. அதில் 3 நாட்கள் மட்டும் கடும் குவாரண்டைனில் இருந்த பின்பு 4வது நாளில் இருந்து பயிற்சியை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. அதாவது அந்த 3 நாட்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், 3 நாட்கள் குவாரண்டைனின் போது, வீரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கூட அனுமதி கொடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அக்ஷர் பட்டேல், இங்கு நாங்கள் யாரையும் சந்தித்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்கள். இதனால் நேரத்தை கழிக்க நன்கு தூங்கிக்கொண்டே இருக்கிறேன் எனத்தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் 3 மாதங்கள் கொண்ட நீண்ட தொடராகும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை முடித்துவிட்டு, இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரானது ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே, வீரர்களுக்கு தனியாக இருந்து மன அழுத்தம் உண்டாகக் கூடாது என்பதற்காக அவர்களின் குடும்பத்தினரும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.