"'தோனி'க்கு பதிலா நான் தான் 'கேப்டன்' ஆவேன்னு எதிர்பார்த்தேன், ஆனா.." பல வருடங்களுக்கு பிறகு.. 'யுவராஜ் சிங்' சொன்ன 'சீக்ரெட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ராகுல் டிராவிட் (Rahul Dravid) தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.

இந்த படு தோல்வியின் காரணமாக, இந்திய அணி கடுமையான விமர்சனத்துக்குள் ஆன நிலையில், கேப்டன் பதவியில் இருந்து டிராவிட்டும் விலகினார். இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி 20 உலக கோப்பையில், சீனியர் வீரர்களான சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோர் ஆடாத நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனாக, அப்போதைய இளம் வீரர் எம். எஸ். தோனி (MS Dhoni) நியமிக்கப்பட்டார்.
தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், கால் பதித்து சுமார் 3 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், தனக்கு கிடைத்த கேப்டன் பதவியை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட தோனி, தனது அறிமுகத் தொடரையே இந்திய அணிக்காக வென்று கொடுத்து அசத்தியிருந்தார். டி 20 உலக கோப்பைத் தொடரில் இந்திய அணிக்காக ஆடியிருந்த யுவராஜ் சிங்கும், மிகச் சிறப்பான பங்கை அளித்திருந்தார்.
இந்நிலையில், அந்த தொடருக்கு முன்பு தான் என்ன எண்ணினேன் என்பது பற்றி, சில முக்கிய தகவல்களை யுவராஜ் சிங் (Yuvraj Singh) தற்போது தெரிவித்துள்ளார். '2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பைத் தொடரில், இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இதனால், அணியில் அதிக குழப்பமும் நீடித்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து என அடுத்தடுத்து வெளிநாட்டு பயணங்கள் இருந்தது. அதே போல, டி 20 உலக கோப்பையும் இருந்ததால், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை வெளிநாட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
எனவே, அணியிலுள்ள சீனியர் வீரர்கள், தங்களுக்கு ஓய்வு வேண்டும் என நினைத்தார்கள். இதனால், டி 20 உலக கோப்பையையும் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக, டி 20 உலக கோப்பையில், நான் கேப்டனாக செயல்படுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால், தோனி தான் புதிய கேப்டன் என அறிவிக்கப்பட்டது.
அணியின் கேப்டனாக யார் இருந்தாலும், அதனை நீங்கள் ஆதரிக்க வேண்டும். அது கங்குலியாக இருந்தாலும், டிராவிட்டாக இருந்தாலும், அல்லது எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதன் முடிவில், நீங்கள் அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவோம்' என யுவராஜ் சிங் தெரிவித்தார்.
தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐம்பது ஓவர் உலக கோப்பையையும் கைப்பற்றி அசத்திய நிலையில், அந்த தொடரிலும் யுவராஜ் சிங், மிக முக்கிய பங்காற்றி, தொடர் நாயகன் விருதும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
