'தோனி'க்கு வேண்டி 10 நாட்கள் நடந்த 'வாக்குவாதம்'.. " அந்த நேரத்துல 'கங்குலி' கொஞ்சம் கூட மனசு இறங்காம இருந்தாரு.." 'முன்னாள்' வீரர் உடைத்த 'ரகசியம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி சந்தித்த கேப்டன்களில் மிக முக்கியமானவர் எம்.எஸ். தோனி (MS Dhoni). இந்திய அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்துள்ள தோனி, மேட்ச் ஃபினிஷர் என்பதன் மூலமும் மிக பிரபலமானவர்.
இவை அனைத்தையும் தாண்டி, விக்கெட் கீப்பரான தோனியிடம், கிரிக்கெட் உலகம் கண்ட பல விக்கெட் கீப்பர்களிடம் இல்லாத வேகமும், திறமையும் காணப்படுகிறது. அவரது கேப்டன்சிக்கும், பேட்டிங்கிற்கும் அதிக ரசிகர்கள் உள்ளது போலவே, அவரது கீப்பிங்கை ரசிப்பதற்கென்றே உள்ள ரசிகர்கள் பட்டாளமும் அதிகம்.
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று கொண்டு, பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் தோனி, எந்த பேட்ஸ்மேன்களுக்கு எப்படியான வியூகங்களை வகுக்க வேண்டும் என்பதிலும் கெட்டிக்காரர். அப்படிப்பட்ட தோனியை, ஒரு விக்கெட் கீப்பராக அடையாளப்படுத்தியவர் முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே (Kiran More) என்பது பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், தோனியை அணிக்குள் தான் எப்படி சேர்த்தார் என்பது பற்றி, கிரண் மோரே தற்போது சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக, ஒரு மாற்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில், கிரிக்கெட் முறைகளும் மாறிக் கொண்டிருந்தது. இதனால், பேட்டிங் வரிசையில் 6 அல்லது 7 ஆவது வீரராக இறங்கி, அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கக் கூடிய ஒரு பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும் என எண்ணினோம்.
அப்போது தான், தோனி உள்ளூர் போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ததை நான் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்த போது தோனி மட்டும் 130 ரன்கள் அடித்திருந்தார். அதனைப் பார்த்து நான் வியப்படைந்தேன். உடனடியாக, அந்த உள்ளூர் தொடரின் இறுதி போட்டியில், தோனிக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நான் கங்குலியிடம் கோரினேன். ஆனால், அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை.
ஏனென்றால், அப்போதைய விக்கெட் கீப்பராக தீப் தாஸ்குப்தா செயல்பட்டு வந்தார். அதன் பின்னர், கங்குலியை சமாதானப்படுத்தவே எனக்கு 10 நாட்கள் எடுத்துக் கொண்டது. பின்னர் தான், தோனியை விக்கெட் கீப்பராக்க சம்மதித்தனர்' என கிரண் மோரே தெரிவித்துள்ளார்.
இதற்கு பிறகு, இந்திய அணியில் இடம்பிடித்த தோனி, கணக்கிலடங்காத சாதனைகள் பல செய்து வரலாறு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.