டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரு கெத்து?.. தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட ஐசிசி!.. WTC FINAL மூலம் இந்திய வீரருக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்களில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஷ்வின் மட்டும் 2வது இடத்தில் நீடித்து டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.
அதேபோல் ஆல்-ரவுண்டர் தரிவரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 4வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தரவரிசையில் தொய்வு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத போதிலும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பென் ஸ்டோக்ஸ் களமிறங்காததால் அவருக்கு புள்ளிகள் குறைந்ததன் அடிப்படையில் ஜடேஜா இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஜூன் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜடேஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், முதலிடத்தில் உள்ள ஜேசன் ஹோல்டரைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.