'அடிச்ச சதம் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியும்!.. அதுக்கு பின்னாடி இருந்த ரண வேதனை'... பேச பேச உணர்ச்சி வசப்பட்ட படிக்கல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலியுடன் அமைந்த பார்ட்னர்ஷிப் குறித்து பட்டிக்கல் மனம் திறந்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 178 என்ற இலக்கை அடைவதற்கு தேவ்தத் பட்டிக்கல்லின் அதிரடி சதம் முக்கிய காரணமாக அமைந்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய தேவ்தத் பட்டிக்கல், ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் சிறப்பாக விளையாடுவதற்காக விராட் கோலியும் தனது ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை யாராலும் இறுதி வரை பிரிக்க முடியவில்லை. அதைத் தொடந்து, 52 பந்துகளை சந்தித்த பட்டிக்கல் 101 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். அதைப் போலவே, கேப்டன் கோலியும் 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்நிலையில், தனது ஆட்டம் குறித்து படிக்கல் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "சதத்தை நெருங்கும் போது எனக்கு ஒரு பதற்றமும் இல்லை. நான் அப்போது கூட விராட் கோலியிடம் நீங்கள் ஆட்டத்தை வேகமாக முடித்துவிடுங்கள் என்றுதான் கூறினேன். ஏனெனில், அணி வெற்றி பெற்றுவிட்டால் போதும், நான் சதமடிக்கவில்லை என்றாலும் வருத்தம் இல்லை. ஒரு சில நேரங்களில் நான் அதிரடி காட்டினேன், ஒரு சில நேரத்தில் கோலிக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே, நாங்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வெல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம்.
இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது, முதல் போட்டியில் ஆட முடியாததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். அப்போது நான் எனக்கான நேரம் வரும் என சமாதானம் செய்துகொண்டேன். அந்த தருணம் தான் இது. மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு நன்கு உதவியது. நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது போட்டியை வெல்வது சுலபமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான தேவ்தத் பட்டிக்கல் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். ஆனால், இந்த ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்னர் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் நடந்த 2 போட்டிகளிலும், 11, 25 என்ற குறைவான ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.