ஒரே ஒரு சதம்.. இரண்டரை ஆண்டு கால வெயிட்டிங்கில் கோலி.. எப்ப தான் முடிவுக்கு வரும்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு'சச்சினின் சாதனைகளை முறியடிக்க இந்திய அணியே ஒரு வீரரைத் தயார் செய்து விட்டது'. தற்போதைய டெஸ்ட் கேப்டன் கோலி, இந்திய அணிக்காக ரன் குவிப்பில் ஈடுபட்டு அசத்திய போது பரவலாக பேசப்பட்ட வாசகம் தான் இது.
2008 ஆம் ஆண்டின் போது, U 19 உலக கோப்பையின் கேப்டனாக இருந்த கோலி, அதனை வென்று கொடுத்த வேகத்தில், சர்வதேச ஒரு நாள் போட்டியின் இந்திய அணியிலும் பிடித்திருந்தார். 20 வயதில் காலடி எடுத்து வைத்த கோலி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்துடன் தான் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
அதன் பிறகு, கண்ணை மூடித் திறப்பதற்குள் அவர் சென்று முடித்த சாதனைகள் ஏராளம். பேட்டிங் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், ஜாக்கஸ் காலிஸ், சங்கக்காரா உள்ளிட்டவர்களின் சாதனையை ஒவ்வொன்றாக தகர்த்தெறிந்தார் கோலி. சச்சினுக்கு பிறகு, அவரைப் போன்ற ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் அணி பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கான விடை, கோலியிடம் இருந்தது. கிட்டத்தட்ட, 10 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், 63 சர்வதேச சதங்களையும் வாரிக் குவித்தார்.
ரன் மிஷின்
விராட் கோலியின் பயணத்தில் சிறந்த காலம் என்றால், அது 2016 - 2018 க்கு இடைப்பட்ட காலங்கள் தான். ரன் மழையில் நனைந்த விராட் கோலிக்கு, 'ரன் மிஷின்' என்ற பெயரும் வந்து சேர்ந்தது. சதம், அரை சதம் என எந்த தொடர் ஆனாலும் ரன் வேட்டை நடத்திக் கொண்டிருந்தார்.
கோலியின் பொற்காலம்
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், 2016 -2018 ஆகிய காலங்களில் மொத்தம் 3,596 ரன்கள் குவித்துள்ள கோலி, இம்மூவாண்டிலும் முறையே 75.9, 75.6 மற்றும் 54.6 என தனது சராசரியை வைத்திருந்தார்.
ஆனால், கோலியின் பேட்டிங் தாக்கம் என்பது, கடந்த 2019 ஆம் ஆண்டுடன் நின்று விட்டது. கடைசியாக, பங்களாதேஷ் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில், தனது கடைசி சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார்.
சதத்திற்கு வெயிட்டிங்
அதன் பிறகு, கிட்டத்தட்ட 28 மாதங்கள் ஓடி விட்ட பிறகு, இன்னும் ஒரு சதத்தைக் கூட எந்த வடிவிலான சர்வதேச போட்டியிலும் கோலி அடிக்கவில்லை. சதம் அடிக்கவில்லை என்றால் கூட, ஒரு கிளாஸ் அதிரடி ஆட்டம், கோலியின் பேட்டிங்கில் கலந்திருக்கும். ஆனால், அப்படி எந்தவித தாக்கமும் இருந்தது போல தெரியவில்லை. யார் கண் பட்டதோ?.
நெருக்கடி
ஆரம்பத்தில், இரண்டு மாதம், மூன்று மாதம் என கோலி சதமடிக்காமல் இருந்த போது, அடுத்த தொடரில் நிச்சயம் அடித்து விடுவார் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இதற்கு மிக முக்கிய காரணம், அவர் ஒவ்வொரு சதத்திற்கும் இடையே அதிக போட்டிகள் எடுத்துக் கொள்வதில்லை என்பது தான். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மாதங்கள் கூட கூட, கோலி சதம் மீதான நெருக்கடியும் அதிகரித்தது.
கோலி தலைமைக்கு பிறகு, மற்ற அனைத்து சர்வதேச அணிகளை விடவும் பேட்டிங், பவுலிங் என சிறந்து விளங்கியது இந்திய அணி. அப்படி இருந்தும், ஐசிசி கோப்பைகளை ஒருமுறை கூட, இந்திய அணி வென்றதில்லை. கோலியின் நேரமா அல்லது இந்திய அணியின் நேரமா என்பது தெரியவில்லை. இந்த நெருக்கடிக்கு மத்தியில், கோலியின் சதத்திற்கான நெருக்கடியும் அவரையும் மனதளவில் நிச்சயம் ஒரு பாடு படுத்தியிருக்கும்.
சர்ச்சைக்கு நடுவே கோலி
அதே போல, சமீபத்தில் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார் கோலி. தொடர்ந்து, ஒரு நாள் போட்டி கேப்டன்சியில் இருந்து கோலியை பிசிசிஐ கழற்றியது கடுமையான சர்ச்சையை ஒரு பக்கம் கிளப்பியிருந்தது. தற்போது, டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருக்கும் கோலி, நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஓரளவுக்கு ஃபார்மில் இருக்கும் கோலி, டெஸ்ட் போட்டியில் தான் அதிகம் சொதப்பி வருகிறார். அதிலும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தினை தேவையில்லாமல் அடிக்க முயன்று ஆட்டமிழக்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
நேற்றைய போட்டியிலும், கோலி அதே போல தான் ஆட்டமிழந்தார். கோலி சதமடிக்கவில்லை என விமர்சனம் இருந்தாலும், அவரது ரசிகர்கள் எப்போதும் அவருக்கு ஆதராகவே இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் கேப்டன்சி மற்றும் பேட்டிங் நெருக்கடியில் அதிகம் சிக்கியதால் தான் அவரால் சதமடிக்க முடியவில்லை. சதம் அடிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் பல போட்டிகளில் கோலி மட்டுமே தனியாளாக நின்று ரன் எடுத்து கொடுத்துள்ளார் என்பது ரசிகர்களின் வாதமாக உள்ளது.
மீண்டு வருவாரா கோலி?
பேட்டிங்கில் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல், அடித்து காலி செய்வதில் கோலி வல்லவர். ஆனால், இந்த வல்லவனை சமீப காலமாக, இந்திய கிரிக்கெட் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கும் மிஸ் செய்து கொண்டு தான் இருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இனி தலைமை தாங்கவுள்ள கோலி, தன்னைச் சுற்றியுள்ள நெருக்கடிகளுக்கு செவி சாய்க்கக் கூடாது. மாறாக, பேட்டிங்கில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து, 71 ஆவது சதத்தை விரைவில் நெருங்க வேண்டும். நெருங்குவார், கூடிய விரைவில் !