T20 WORLD CUP: இந்தியா- பாகிஸ்தான் போட்டி.. வேற லெவலில் சாதனை செய்த ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்காக வினியோகிக்கப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 5 நிமிடத்திலேயே விற்று தீர்ந்து விட்டன.
ஐசிசி டி20 உலககோப்பை போட்டி 2022 அக்டோபர் 16-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டி மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது . இதனால் உலகக் கோப்பை போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தியா VS பாகிஸ்தான்
மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய ஏழு இடங்களில் விளையாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெறவுள்ளது. இந்திய அணி வரும் அக். 24ஆம் தேதி தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் மோதுகிறது. இது உலகின் 2வது மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. துபாயில் நடைபெற்ற கடந்த ஆண்டு டி20 உலககோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது.
5 நிமிடத்தில் டிக்கெட் காலி
இதனால், இந்திய ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அதற்கு பழித் தீர்க்கும் விதமாக இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் டி20 உலககோப்பையில் இரு அணிகளும் மீண்டும் லீக் சுற்றில் மோதுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை ஐ.சி.சி. இன்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திலேயே 90 ஆயிரம் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டன. இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கும் இவ்வளவு அதிக டிக்கெட் குறைந்த நேரத்தில் விற்றது இல்லை.
ஐசிசிக்கு அடித்த ஜாக்பாக்
இதனால், ஐசிசி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், 27ம் தேதி சிட்னியில் தென்னாப்பிரிக்கா-பங்களாதேஷ் மற்றும் இந்தியா -குரூப் ஏ ரன்னர்-அப் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 45 போட்டிகளின் டிக்கெட் விற்பனையில் மட்டும் 2 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போட்டிகளை காண 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்கெட் விற்பனை குறித்து போட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி மிச்செல் என்ரைட் கூறுகையில், "இதுவரை பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்களால் வாங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 21 முதல் ஆஸ்திரேலிய பார்வையாளர்களுக்கு டிக்கெட் கவுன்ட் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.