‘இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்’.. டி20 உலகக்கோப்பை UAE-ல் மட்டுமில்ல இங்கயும்தான் நடக்க போகுது.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் இடம் குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் அப்போது அங்கு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது.
அதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான நாட்கள் நெருங்கி வருவதால், இந்தியாவில் இந்த தொடரை நடத்த சாத்தியம் உள்ளதா என பிசிசிஐயிடம் ஐசிசி கேட்டிருந்தது.
இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க ஐசிசி அவகாசம் வழங்கியிருந்தது. இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நேற்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய தகவல் தெரிவித்திருந்தார். அதில், டி20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொள்ளலாம் என ஐசிசியிடம் தகவல் தெரிவித்துள்ளதாக கங்குலி கூறியிருந்தார்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை நடக்கும் தேதி மற்றும் இடங்களை ஐசிசி இன்று (29.06.2021) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஓமன் நாட்டிலும் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் ஐசிசி தெரிவித்துள்ளது. முன்னதாக, இதுகுறித்து தங்களிடம் ஐசிசி பேசி வருவதாக ஓமன் கிரிக்கெட் வாரியம் கூறியது குறிப்பிடத்தக்கது.