‘ஐசிசி கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு’!.. இந்தியாவில் நடத்த நோ சான்ஸ்.. சவுரவ் கங்குலி சொன்ன முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. இந்த சூழலில் இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 29 போட்டிகளே முடிவடைந்துள்ளன. அதனால் எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த சாத்தியம் உள்ளதாக என 4 வாரத்தில் தகவல் தெரிவிக்குமாறு பிசிசிஐக்கு ஐசிசி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது. மேலும் கொரோனா பரவலில் 3-வது அலை வர வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து PTI செய்தி நிறுவனத்துக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், ‘டி20 உலகக்கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிக்கொள்ளலாம் என ஐசிசிக்கு நாங்கள் தெரிவித்துவிட்டோம்’ எனக் கூறியுள்ளார். வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்த தொடர் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்தபின், டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு டி20 உலகக்கோப்பை தொடர் மாற்றப்பட்டாலும், இந்தியாதான் இந்த தொடரை நடத்தும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
