ஒருவேளை மேட்ச் டிரா ஆனா யார் ‘வின்னர்’-னு எப்படி முடிவு பண்றது..? ஐசிசிக்கு கவாஸ்கர் கொடுத்த சூப்பர் அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றியாளரை தேர்வு செய்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின், முதல் நாள் ஆட்டமே மழையால் தடைப்பட்டது. இதன்பின்னர் 2-வது மற்றும் 3-ம் நாள் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்றைய 4-ம் நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் விராட் கோலி 44 ரன்களும் அடித்தனர். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை கெயில் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை எடுத்து வலுவான நிலையில் அந்த அணி உள்ளது.
மழையால் 2 நாள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதால், ரிசர்வ் டே எனப்படும் 6-வது நாள் கண்டிப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 2 நாட்களில் 3 இன்னிங்ஸ்கள் ஆட வேண்டியுள்ளதால், பெரும்பாலும் போட்டி டிரா ஆகவே வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளுமே சாம்பியன் என ஐசிசி அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இப்போட்டியின் வெற்றியாளரை முடிவு செய்வது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆலோசனை கூறியுள்ளார். அதில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில்தான் முடியும். அதனால் சாம்பியன் பட்டம் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதற்குமுன் ஐசிசி தொடர்களின் இறுதி முடிவு எட்டாமல் இருந்ததில்லை. இதுதான் முதல்முறை. இப்போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இரு அணிகளும் பேட்டிங்கில் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே போட்டி சரியாக முடிவடையும்.
கால்பந்து போட்டிகள் டிராவில் முடிந்தால், பெனால்டி ஷூட் மூலம் வெற்றியாளர் யார் என முடிவு செய்யப்படும். டென்னிஸ் போட்டிகளிலும் இதேபோல் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுபோன்ற விதிகள் இல்லை. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் புதிய விதி குறித்து ஐசிசி நிச்சயம் ஆலோசிக்க வேண்டும். அதன்மூலம் இனிமேல் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்’ என சுனில் கவாஸ்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.