‘ரோகித் விக்கெட் எடுத்தது பெருசில்ல… ‘இவரை’ அவுட் பண்ணதுதான் ஜாக்பாட்!- ஷஹின் அஃப்ரிதிக்கு ஐடியா கொடுத்தது யார் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா சந்தித்த மோசமான தோல்வியின் பாதிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதன் பின்னர் அரையிறுதிக்குக் கூட நுழைய முடியாமல் இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது, கேப்டன் மாற்றம், பயிற்சியாளர் மாற்றம் என அடுத்தடுத்து தொடர் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டி கடந்த அக்டோபர் 24-ம் தேதி துபாயில் நடந்தது. அன்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்த பெரும் தோல்வி ரசிகர்களால் பெரிதாக விமர்சிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் முகம்து ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் கூட்டணியில் அடித்த 152 ரன்கள் இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பாகிஸ்தானுக்கு உறுதி செய்தது. இந்திய அணியில் முதல் ஆளாக ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். ஆனால், ரோகித் சர்மா விக்கெட்டை விட கே.எல்.ராகுலை அவுட் செய்து வெளியேற்றியது தான் தன்னைப் பொறுத்த வரையில் சிறப்பானது எனத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹின் அஃப்ரிதி.
கே.எல்.ராகுல் விக்கெட்டை வீழ்த்தியதற்கு தான் மட்டுமே முக்கியக் காரணம் இல்லை என்றும் அந்த விக்கெட்டுக்கான சிறப்பான ஐடியாவை கொடுத்த என் நண்பரும் காரணம் எனத் தெரிவித்துள்ளார் ஷஹின் அஃப்ரிதி. இதுகுறித்து அவர் கூறுகையில், “இரண்டாவது ஓவர் ஆரம்பிக்கும் முன்னர் நான் பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டும் என எங்கள் அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான சோயப் மாலிக்கிடம் கேட்டேன். அவர்தான் எப்படிப் பந்துவீச வேண்டும் என பேட்ஸ்மேனை வைத்து ஐடியா கொடுத்தார்.
பாகிஸ்தான் அணிக்காக 22 ஆண்டுகளாக விளையாடி வருகிறார் சோயப் மாலிக். பல சூழ்நிலைகளிலும் பல விதமான மைதானங்களிலும் அனைத்து வகையான ஆட்டங்களையும் சோயப் ஆடியுள்ளார். அதனால் அவருக்கு எல்லாமே தெரியும். கிரிக்கெட் சார்ந்த அத்தனை அனுபவங்களும் அவருக்கு உண்டு. இதனால்தான் நான் கே.எல்.ராகுலுக்கு எப்படி பந்துவீச வேண்டும் எனக் குறிப்பிட்டுக் கேட்டு ஐடியா வாங்கிக் கொண்டேன். 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியதுமே நான் நேராக சென்றது சோயப் மாலிக்கிடம் தான். அந்த விக்கெட் என்னுடையது இல்லை என்றும் ராகுலின் விக்கெட் அவருடையதுதான் என்றும் சொல்லி நன்றி தெரிவித்தேன்.
எல்லாருக்கும் தெரியும் ரோகித் சர்மா எவ்வளவு ஆபத்தான ஆட்டக்காரர் என்று. அவரை ரன்கள் எடுக்க விடக்கூடாது என நீண்ட நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தேன். திரும்பத் திரும்ப ரோகித்துக்கு யார்க்கர் பந்து வீச வேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால், ஒரே பந்தில் ரோகித் விக்கெட் எடுக்கப்பட்டது” எனப் பேசி உள்ளார்.