‘இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்’.. ஓப்பனிங் விளையாடப் போறது இவங்கதானா..? ஆரம்பமே ‘சஸ்பென்ஸ்’ வச்ச கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட உள்ள வீரர்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டம் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 49 ரன்களும், மொயின் அலி 43 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 70 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் வரும் 24-ம் தேதி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் சார்பாக தொடக்க வீரர்களாக யார் களமிறங்க உள்ளனர்? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் டாஸ் நிகழ்வின் போது கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘ஐபிஎல் தொடருக்கு முன்பு இருந்த நிலைமை, தற்போது அப்படியே வேறாக உள்ளது. டாப் ஆர்டரில் கே.எல்.ராகுலை தாண்டி யோசிக்க முடியவில்லை. நான் 3-வது வீரராக களமிறங்குகிறேன். இப்போதைக்கு இதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும்’ என விராட் கோலி கூறினார்.
தற்போது நடந்த முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுலும், இஷான் கிஷனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் வழக்கமாக ரோஹித் ஷர்மா தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். ஆனால் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளார்.
அதனால் கே.எல்.ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஆகிய இருவரில் யாரை களமிறக்குவது என இந்திய அணி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் விளையாடியது குறிப்பிடத்தக்கது.