"தோனி கூட ஆடுறப்பவே இப்டி தான் நாங்க இருந்தோம்.." கேப்டன் பதவி விலகல்.. VIRAT KOHLI ஓபன் டாக்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகேப்டன் பதவியில் இருந்து முற்றிலும் விலகிய விராட் கோலி, முதல் முறையாக அது பற்றி மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, திடீரென அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, இனி டி 20 போட்டியில் இந்திய அணியை வழிநடத்தப் போவதில்லை என விராட் கோலி அறிவித்திருந்தார்.
என்ன காரணம்?
இதனைத் தொடர்ந்து, ஒரு நாள் கேப்டன் பதவியில் இருந்து கோலியை பிசிசிஐ விலக்கியிருந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், டெஸ்ட் போட்டியின் கேப்டன்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கோலி, தென்னாப்பிரிக்க தொடருடன் அதில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கோலியின் திடீர் முடிவு, அவரது ரசிகர்களை அதிகம் வேதனை அடையச் செய்திருந்தது. அது மட்டுமில்லாமல், இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன், இப்படி ஒரு முடிவை திடீரென அறிவிக்க என்ன காரணம் இருக்கப் போகிறது என்றும் பலர் கேள்வி எழுப்பினர்.
டெஸ்ட் கேப்டன் யார்?
இன்று வரை, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கோலி முடிவு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 33 வயதாகும் விராட் கோலி, இனி வரும் நாட்களில், பேட்டிங்கில் தனி கவனம் செலுத்த வேண்டி, இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டியின் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
உங்கள் கையில் இல்லை
இந்நிலையில், தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி, கோலி முதல் முறையாக மனம் திறந்துள்ளார். 'தலைவனாக இருப்பதற்கு நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எம்.எஸ். தோனி அணியில் இருந்த போது, அவர் தலைவராகவே இருந்தார். அவரிடம் இருந்து நாங்கள் பல ஆலோசனைகளை பெற்றுள்ளோம். அணி வெற்றி பெறுவதும், வெற்றி பெறாமல் போவதும் உங்கள் கையில் இல்லை.
கேப்டன் போல யோசிக்கிறேன்
அதே போல, கேப்டன் பதவியில் இருந்து விலகிச் செல்வதும், அதனை தகுந்த நேரத்தில் முடிவு எடுப்பதும் தலைமை பண்பின் ஒரு அங்கம் தான். எந்த வகையான வாய்ப்பாகவும், பாத்திரமாகவும் இருந்தாலும், அதனை தவற விடமால், அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
தோனியின் தலைமையில், சிறிது காலம் ஆடிய நான், பிறகு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டேன். என்னுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. நான் அணியில் ஒரு வீரராக இருந்தால் கூட, கேப்டனைப் போல தான் சிந்திக்கிறேன்' என கோலி தெரிவித்துள்ளார்.