‘அன்னைக்கும் நீங்கதான் கூட நின்னீங்க… இன்னைக்கும் நீங்கதான் நிக்கிறீங்க..!- ‘டச்சிங்’ ஆக பேசிய ரோகித் சர்மா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வது போல இந்திய அணியின் டி20 கேப்டன் ஆகப் பொறுப்பு ஏற்று இருக்கும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணமும் ஒரு வட்டம் ஆக வந்து நின்றுள்ளது. இது குறித்து ரோகித் சர்மாவே நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டன் என்ற புதிய பொறுப்புடன் நியூசிலாந்து அணியைச் சந்திக்கிறார் ரோகித் சர்மா. புதிய தலைமை பயிற்சியாளர் ஆக ராகுல் டிராவிட் பொறுப்பு ஏற்றுள்ளார். இதையடுத்து புதிய கேப்டன்- கோச் தலைமையிலான இந்திய அணி புதிய பரிமாணங்களை எட்டப்போவதாக பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் இன்று நவம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் நேற்று ரோகித்- டிராவிட் அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர் இன்றைய சூழல் தனக்கு 2007-ம் ஆண்டை நினைவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா.
ரோகித் கூறுகையில், “கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் ஒரு நாள் போட்டிகளில் நான் அறிமுகம் ஆனேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடும் போது நான் அறிமுகம் ஆனேன். அன்று அணியின் கேப்டன் ஆக டிராவிட் தான் இருந்தார். டிராவிட் போன்ற பெரும் ஜாம்பவான்களுக்கு நடுவில் அந்த டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பதே நான் பெரிய அங்கீகாரம் ஆக உணர்ந்தேன்.
அந்த காலகட்டத்தில் நான் அறிமுகம் ஆன சமயம் என்பதால் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டேன். என் வயது வீரர்களுடன் கூட அந்த சமயத்தில் நான் சகஜமாகப் பழகவில்லை. அதன் பின்னர் பெங்களுரூவில் ஒரு கேம்ப்-ன் போதுதான் டிராவிட் உடன் பேச நேரம் அமைந்தது. சின்ன உரையாடல் என்றாலுமே அது எனக்கு மிகப்பெரிய விஷயம் ஆக இருந்தது. அதன் பின்னரும் நாங்கள் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை.
பின்னர் அயர்லாந்தில் ஒரு போட்டி. அப்போதுதான் டிராவிட் என்னிடம் வந்து அன்றைய போட்டியில் நான் விளையாட களம் இறக்கப்படுவதாக சொன்னார். அப்போது என்னுடைய சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதன் பின்னர் காலங்கள் கடந்து இன்று மீண்டும் டிராவிட் தலைமையில் பயிற்சி எடுத்து நான் கேப்டன் ஆக அறிமுகம் ஆகும் போட்டியும் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடியதில் பெருமையாக இருக்கிறது. இனி வரும் அனுபவங்களுக்காகவும் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.