‘அன்னைக்கு 10 லட்சம் ரூபாய், இன்னைக்கு ‘இத்தனை’ கோடிகள் வந்தும்…’- அடக்கமாகப் பேசும் இந்திய அணியின் ‘ஆல்-ரவுண்டர்’..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு’10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் போது இருந்த ஒரு உற்சாகம் இன்று கோடிகளில் வாங்கும் போது அவ்வளவாக இல்லை’ எனக் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஒருவர்.
இந்திய அணியின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஆகக் கருதப்படுபவர் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சகோதரர்கள் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி மிகவும் பிரபலம் அடைந்தார்கள். சகோதரர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே வயது வித்தியாசம் என்றாலும் இருவரும் கிரிக்கெட் வீரர்களாக தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.
28 வயதான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரையில் 92 போட்டிகளில் விளையாடி உள்ளார். தனக்காக ஆரம்ப நிலை சம்பளம் முதல் இன்று வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம் வரையில் வெளிப்படையாக பேசியுள்ளார் ஹர்திக். அவர் கூறுகையில், “2016-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் போது என்னுடைய சம்பளம் 10 லட்சம் ரூபாய் ஆக இருந்தது.
அடுத்த ஆண்டு இரண்டு முன்னணி வீரர்கள் என்னிடம் வந்து நான் 6-7 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பெறத் தகுதி வாய்ந்தவன் எனக் கூறினார்கள். காரணம், அப்போது இந்திய அணியில் நான் விளையாடி இருந்தேன். அணியில் நான் மட்டுமே ஆல்-ரவுண்டர் ஆக இருந்த காலகட்டம். ஆனால், அந்த சமயத்திலேயே க்ருனால் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தார். சரி, அதனால் என்ன? க்ருனால்தான் நிறைய சம்பாதிக்கிறானே என நினைத்துக் கொள்வேன்.
அந்த சமயமும் சம்பளம் குறைவாக இருந்தாலும் ஏற்கெனவே இந்திய அணியில் விளையாடி இருந்த காரணத்தாலும் எனக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அப்போதும் நான் 2 கோடி ரூபாய் வரையில் சம்பாதித்துக் கொண்டுதான் இருந்தேன். இன்று நான் 11 கோடி ரூபாய் சம்பளம் ஆகப் பெறுகிறேன். க்ருனால் 9 கோடி ரூபாயை சம்பளமாகப் பெறுகிறான். குடும்பத்துக்கு எங்களால் 20 கோடி ரூபாய் ஈட்ட முடிகிறது. இது மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்கள் இருவருக்குமே இது உற்சாகமானதாக இல்லை. சரி, பணம் முக்கியம்தான். பணம், ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கிறது. இன்னும் அதிக பணம் இன்னும் நிலையான வாழ்க்கையைக் கொடுக்கும். இன்று நான் இன்னமும் அடக்கமாக செயல்பட நினைக்கிறேன் ” எனப் பேசி உள்ளார்.