"சே, இப்படி ஆயிடுச்சே.." ஏமாற்றத்தில் ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்.. நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை, இந்திய அணி வெற்றிகரமாக கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமானது.
புஜாரா மற்றும் ரஹானே ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாமல், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்கியிருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார்.
100 ஆவது டெஸ்ட்
அதன்படி ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
முன்னதாக, விராட் கோலியின் இந்த பயணத்திற்கு சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும், மொஹாலி மைதானத்தில் ரசிகர்களும் கூடியிருந்தனர். அதே போல, நூறாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கோலி, சதமடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
மிஞ்சிய ஏமாற்றம்
ஆனால், அவர் 45 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் லாஸித் எம்புல்டேனியா பந்து வீச்சில் போல்ட் ஆனார் கோலி. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அவர், திடீரென அவுட்டானதால் அதிகம் ஏமாற்றம் அடைந்தார். அவரது சதத்தைக் காண ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.
வேதனை
கடந்த இரண்டரை ஆண்டுகளாக, சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருக்கும் கோலி, தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் சதமடித்து விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் மீண்டும் ஒரு முறை சதமடிக்கமால் அவுட்டானதால் ரசிகர்கள் வேதனை அடைந்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பு இருந்தால், அவர் சதமடிப்பார் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர்.
ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்
இந்நிலையில், கோலி அவுட்டான போது, அதனை கண்டு கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ரசிகர்களைப் போலவே, ஒரு நிமிடம் ஏமாற்றம் அடைந்தார். சிறப்பாக சென்று கொண்டிருந்த பார்ட்னர்ஷிப், கோலி விக்கெட்டால் பிரிந்ததால், அதிர்ச்சியில் தலைக்கு பின் கையைக் கட்டிக் கொண்டு ரோஹித் நின்றார்.
கோலி ஆட்டமிழந்ததால் விரக்தி அடைந்து ரோஹித் ஷர்மா செய்த ரியாக்ஷன், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.