மும்பை பிளேயருக்கு பதிலா.. 'சிஎஸ்கே' பையனுக்கு வாய்ப்பு.. வாசிம் ஜாஃபர் கொடுத்த 'ஐடியா'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் என இரண்டையும் கைப்பற்றி சாதனை புரிந்த இந்திய அணி, அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ளது.
முதலாவதாக டி 20 தொடர் ஆரம்பமாகும் நிலையில், இதன் முதல் போட்டி, இன்று இரவு ஆரம்பமாகிறது.
இந்திய அணி வீரர்கள் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு, இலங்கை தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர், காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இளம் வீரர்
அதே போல, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்காமல் இருந்த பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். ரிஷப் பண்ட் இல்லை என்பதால், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இளம் வீரர்களும் இந்திய அணியில் அதிகம் இடம்பெற்றுள்ள நிலையில், ஒரே ஒரு வீரருக்கு அதிக வாய்ப்புகள் இந்திய அணியில் வழங்கப்படாதது பற்றி, பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
ருத்துராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் தொடரில், சென்னை அணிக்காக ஆடி வந்த ருத்துராஜ் கெய்க்வாட், தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தின் மூலம், இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், இவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது, ஒரு முறை கூட, ருத்துராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
அதற்கு முன்பாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் இந்திய அணியிலும் ருத்துராஜ் இடம் பெற்றிருந்தார். ஆனால், அப்போதும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ஜொலித்த பல இளம் வீரர்களுக்கு, இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வைத்து வரும் நிலையில், ருத்துராஜுக்கு குறைவான அளவில் வாய்ப்பு கிடைத்து வருவது பற்றி, பலரும் கேள்வி எழுப்பினர்.
வாசிம் ஜாஃபர் கருத்து
தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் மட்டும் ருத்துராஜ் களமிறங்கினார். இந்நிலையில், இன்று ஆரம்பமாகும் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில், ருத்துராஜுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த முறை வாய்ப்பு
'ரோஹித் ஷர்மாவுடன், இந்த முறை ருத்துராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனென்றால், கடந்த முறை தொடக்க வீரராக வந்த இஷான் கிஷானுக்கு, அது சிறந்த தொடராக அமையவில்லை. அதனால், இந்த முறை ருத்துராஜுக்கு 3 போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளிலாவது, அவரை களமிறக்க வேண்டும்' என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக பேசியிருந்த வாசிம் ஜாஃபர், இந்த ஒரு போட்டியில் மட்டும் ருத்துராஜுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டு, அடுத்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் முழுமையாக வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.