IND VS SL :10 ஆண்டுகளில் புஜாரா, ரஹானே இல்லாத முதல் டெஸ்ட்… அவர்களின் இடத்தில் யார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சில ஆண்டுகளாக தங்களின் முழுமையான ஆட்டத்திறனில் இல்லாத ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணியின் மூத்தவீரர்களும் பேட்டிங் தூண்களுமான ரஹானேவும் புஜாராவும் இலங்கைக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த பத்தாண்டுகளில் இவர்கள் இருவரும் இல்லாமல் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. இப்போது அவர்கள் இருவரும் தங்கள் திறமையை நிருபித்து மீண்டும் அணிக்குள் திரும்ப அவர்கள் உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
தூணாக இருந்த புஜாரா:
34 வயதாகும் புஜாரா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ராகுல் டிராவிட் போன்ற நிதானமான ஆட்டத்தால் கவனம் பெற்ற டிராவிட்டின் இடமான மூன்றாம் இடத்தில் களமிறங்கிய சிறப்பான ஆட்டத்தால் பல போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். அதைவிட முக்கியமாக இந்திய அணி சரிவில் இருக்கும் பல போட்டிகளில் சுவர் போல நின்று விளையாடி தோல்வியைத் தவிர்த்திருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரால் பெரிய அளவில் ரன்களை சேர்க்க முடியவில்லை. அதனால் அவர் மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.
பின்வரிசையை தாங்கி நின்ற ரஹானே
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் ஓய்வுக்குப் பின்னர் பின்வரிசை பேட்டிங்கைத் தாங்கிபிடிக்கும் வீரராக உருவானார் ரஹானே. அவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் கோலி இல்லாத போது தலைமையேற்று தொடரை வென்று சாதனை படைத்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக புஜாரா போலவே இவரது பேட்டிங்கிலும் சுணக்கம் ஏற்பட்டதால் இப்போது உள்ளூர் போட்டிகளில் தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்.
இவர்களுக்கு பதில் யார்?
மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிரந்தரமாக இவர்கள் இருவரும் விளையாடி வந்த இவர்கள் அணியில் இல்லாத நிலையில் அந்த இடங்களை நிரப்பப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புஜாரா போலவே நிதானமாக விளையாடும் ஹனுமா விஹாரி பின் வரிசையில் இருந்து மூன்றாம் இடத்தில் விளையாட அழைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அது போலவே நிதானமும் தேவையான நேரத்தில் அதிரடியாகவும் விளையாடும் ஸ்ரேயாஸ் ஐயர் ரஹானே இடத்தில் விளையாடுவார் என நம்பலாம்.
இன்னும் வாய்ப்பு இருக்கிறதா?
ரஹானே மற்றும் புஜாரா இப்போது அணியில் இல்லை என்றாலும் அவர்களுக்கான வாய்ப்பு முற்றிலுமாக முடிந்துவிடவில்லை என்றும் எதிர்காலத்தில் அவர்கள் அணிக்குள் இடம்பெறமுடியும் என்றும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்று அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அதனால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருவரும் மீண்டும் அணிக்குள் இணைய இன்னமும் வாய்ப்பு உள்ளது.