"எல்லோருக்கும் ரொம்ப நன்றி".. தினேஷ் கார்த்திக்கின் உருக்கமான பதிவு.. ரசிகர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரரான தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். சொல்லப்போனால் தோனிக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் தினேஷ் கார்த்திக். இடையில் பல்வேறு சரிவுகளை அவர் சந்தித்து வந்தார். கடந்த வருட ஆகஸ்டு மாதத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்தியா. அப்போது, வர்ணனையாளராக பணிபுரிந்தார் தினேஷ் கார்த்திக்.
ஆனால், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை பெரிய தடைகளையும் தகர்க்கலாம் என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்தார் தினேஷ் கார்த்திக். அதற்கு அவருக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது கடந்த ஐபிஎல் சீசன். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த ஆண்டு விளையாடிய அவர் 16 போட்டிகளில் 330 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 183.33 ஆகும்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் அவரால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இந்நிலையில், தினேஷ் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில்,"உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியது பெருமையான உணர்வு. இறுதி நோக்கத்தை நாங்கள் இழந்துவிட்டோம். ஆனால் இந்த அனுபவம் என் வாழ்க்கையைப் போற்ற வேண்டிய பல நினைவுகளால் நிரப்பியது. எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் மிக முக்கியமாக ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக இதுவரையில் 94 ஒருநாள் போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும், 60 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக 229 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில், அனைவர்க்கும் நன்றி கூறுவதாக அவர் பதிவிட்டிருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!!