எப்படிப்பா இத்தனை விஷயம் ‘ஒரே’ மாதிரி நடக்கும்..! ரிஷப் பந்த் அடிச்ச ‘ரன்னை’ கொஞ்சம் கவனிச்சீங்களா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிஷப் பந்த் அடித்த ரன் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 70 ரன்களும், மார்க் சாப்மேன் 63 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியைப் பொறுத்தவரை அஸ்வின் மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீபக் சஹார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் 15 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்சல் சாண்டர் வீசிய 6-வது ஓவரில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
அப்போது டிரெண்ட் போல்ட் வீசிய 14-வது ஓவரில் ரோஹித் ஷர்மா அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து வந்த ரிஷப் பந்துடன் கூட்டணி அமைத்த சூர்யகுமார் யாதவ், நியூஸிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 62 ரன்கள் எடுத்திருந்தபோது டிரெண்ட் போல்ட் வீசிய 17-வது ஓவரில் போல்டாகி சூர்யகுமார் யாதவ் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. அப்போது களத்தில் இருந்த ரிஷப் பந்த் பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
Unbelievable coincidence😳#INDvNZ pic.twitter.com/yPcLmaA4s2
— CricTracker (@Cricketracker) November 17, 2021
இந்த நிலையில் ரிஷப் பந்த் குறித்து சுவாரஸ்ய தகவலை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதாவது நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 17 ரன்கள் அடித்தார், அவரது ஜெர்சி எண் 17, அதேபோல் நேற்று போட்டி நடந்த தேதி 17. இவை அனைத்து எதர்ச்சையாக நடந்தது ஆச்சரியமாக உள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
