அந்த ஒரே 'இன்னிங்ஸ்' தான்,,.. அன்னைக்கி நைட்டே '1000' போன் கால்... '400' பேர் வீட்டுக்கு வந்து 'வாழ்த்து' சொன்னாங்க!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணி சாதனை வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ராகுல் டெவாட்டியா, முதலில் பேட்டிங் செய்ய தடுமாறிய நிலையில், ராஜஸ்தான் அணி தோல்வி பெறும் என்றே அனைவரும் நினைத்தனர். அதே போல டெவாட்டியாவின் பேட்டிங்கும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இறுதியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற ராகுல் டெவாட்டியா உதவினார். இதன் காரணமாக, ஒரே இரவில் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் அவரது திறமையை பாராட்டினார்.
இந்நிலையில், கிராமத்தில் அமைந்துள்ள ராகுல் டெவாட்டியாவின் வீட்டில் அன்றிரவே சுமார் 400 க்கும் மேற்பட்டோர் வீட்டிற்கு வந்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதாக டெவாட்டியாவின் தந்தை தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், 1000 பேர் வரை தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
'வீட்டிற்கு வந்து வாழ்த்து சொன்ன அனைவரும் ராகுல் உங்கள் பிள்ளை மட்டுமில்லை. இந்த கிராமத்தின் 'பிள்ளை' என பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். வீட்டிற்கு வந்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே போல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளால் எனக்கு தலைவலி வந்தது. ராகுலால் நான் பெருமிதம் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் சிகி என்ற கிராமத்தில் பிறந்த ராகுல் டெவாட்டியா, இன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.