டி20 மேட்ச் இப்படித்தான் இருக்கும்.. சிஎஸ்கே வீரருக்கு செம்ம வாய்ப்பு.. ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்த அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு தர விரும்புகிறோம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க வீரர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏகப்பட்ட வீரர்கள் அணியில் தங்களுக்கான இடத்தை தக்க வைக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். எனவே, கேஎல் ராகுல் ஆடாததால் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்தும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் இஷான் கிஷன் சோபிக்கவில்லை.
ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15.25 கோடி என்ற பெரும் தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததையடுத்து, அவர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. , ரோஹித் - இஷான் ஜோடி தான் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஓபனிங்கில் இறங்கப்போகிறது. இதனால், தன் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதை இஷான் கிஷன் அறிந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளிலும் ஓபனிங்கில் இறங்கிய இஷான் கிஷன் 23.66 என்ற சராசரியுடன் வெறும் 71 ரன்கள் மட்டுமே அடித்தார்.
கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் மற்றும் இஷான் கிஷனை ஓபனிங்கில் இறக்கிவிட்டு, ரோஹித் சர்மா 4ம் வரிசையில் இறங்கினார். ஆனால் அவர்கள் இருவருமே சோபிக்கவில்லை. இஷான் கிஷனிடமிருந்து பவர் ப்ளேயில் அதிரடியான பேட்டிங் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மிஸ் ஆனது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்து இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது, டி20 உலக கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழுவினர், அணி நிர்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் அணியை சற்று பொருத்தமானதாக மாற்ற உள்ளோம். ஒவ்வொரு வீரருக்குமான பணிச்சுமையை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. எல்லோருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்பை தர விரும்புகிறோம். டி20 போட்டி கடினமானதாக இருக்கும். அதில் ஆடும் வீரர்களை குறுகிய காலத்தில் எடை போட இயலாது. வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரில் இளம் வீரர்களை பெரிய ஷாட் ஆடச்சொல்லித்தான் அனுப்பினோம். இஷான் கிஷன் திறமையான வீரர் என்பதாலும், சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதாலும் தான் அவரை அணியில் எடுத்திருக்கிறோம்.
இந்த ஒரு தொடரை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆவேஷ் கான் போன்ற திறமையான வீரர்களை ஒருசில போட்டிகளில் விளையாடியதை வைத்து மதிப்பிட மாட்டோம். ஒரு தொடர், ஒரு ஆட்டத்தை கொண்டு அவர்கள் திறமையை மதிப்பிடமாட்டோம். அவர்கள் நன்றாக விளையாடியதால்தான் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளனர். அவர்களுக்கும் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவோம்" என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.