டெஸ்ட்டில் விளையாடிய ‘அனுபவம்’ அதிகம் இல்லை.. ‘அப்போ அவர் கொடுத்த அட்வைஸ் ரொம்ப உதவியா இருந்துச்சு’.. நட்சத்திர வீரரை புகழ்ந்த இந்திய ‘மகளிர்’ கிரிக்கெட் வீராங்கனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டிகளுக்கு மனரீதியாக தயார்படுத்திக்கொள்ள இந்திய வீரர் ஒருவர் கொடுத்த ஆலோசனை உதவியாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியுடன், மகளிர் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்திய மகளிர் அணி, 7 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் கேப்டன் மிதாலிராஜை தவிர மற்ற வீராங்கனைகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் போதிய அனுபவம் கிடையாது.
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ‘வலைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரஹானேவுடன் பேசும் வாய்ப்பு அமைந்தது. அப்போது, டெஸ்ட் போட்டிகளில் எப்படி நீண்ட நேரம் விளையாடுவது என்பது குறித்து பல ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
நாங்கள் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், ரஹானே கொடுத்த ஆலோசனை எங்களை மனரீதியாக தயார்படுத்திக்கொள்ள உதவியாக இருந்தது. இந்த ஆலோசனைகளை பின்பற்றி சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’ என ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலிராஜ், தனது 22 ஆண்டுகால கிரிக்கெட்டில் இதுவரை 10 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (16.06.2021) பிரிஸ்டல் (Bristol) மைதானத்தில் தொடங்குகிறது.