‘கங்குலியின் 25 ஆண்டுகால சாதனை முறியடிப்பு’!.. அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்தை ‘அலறவிட்ட’ நியூஸிலாந்து வீரர்.. அப்போ இந்தியாவுக்கு செம ‘டஃப்’ கொடுப்பார் போலயே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் அறிமுக வீரர் டெவன் கான்வே சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டாம் லாதம் மற்றும் அறிமுக வீரர் டெவன் கான்வே களமிறங்கினர்.
இதில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது ஒல்லி ராபின்சன் ஓவரில் போல்டாகி டாம் லாதம் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த ராஸ் டெய்லரும் 14 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இப்படி மூத்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினாலும், மறுமுனையில் அறிமுக வீரர் டெவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் 240 பந்துகளில் 136 அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்துள்ளது.
இந்த நிலையில் வரும் 18-ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து இந்தியா விளையாட உள்ளது. இந்த சமயத்தில் இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்தின் மூத்த வீரர்கள் சொதப்பிய நிலையில், அறிமுக வீரர் டெவன் கான்வே தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு இவர் சவால் அளிக்கும் வகையில் இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டுகால சாதனையை டெவன் கான்வே முறியடித்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இடதுகை பேட்ஸ்மேனான கங்குலி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் (131) அடித்து அசத்தினார். தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் டெவன் கான்வே 136 ரன்கள் அடித்ததன் மூலம் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.