'இதுக்கு பேரு கிரிக்கெட்டா?.. நீங்க எல்லாம் தயவு செஞ்சு இனிமே கிரிக்கெட் விளையாடாதீங்க'!.. கொந்தளித்த முன்னாள் வீரர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஜிம்பாப்வேக்கு எதிரான பாகிஸ்தானின் டெஸ்ட் தொடரை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான், அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடியது. இதில், 2-1 என்று டி20 தொடரையும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
ஆனால், இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரிசமம் இல்லாத அணிகள், துளியும் சுவாரஸ்யம் இல்லாத சீரிஸ், ஒன் சைட் ரிசல்ட் என்று இந்த தொடரை கடுமையாக விமர்சித்துள்ளார் ரமீஸ் ராஜா.
இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ரமீஸ் ராஜா, "இதுபோன்ற ஒருதலைப்பட்சமான முடிவுகள் கொண்ட தொடர்கள் சிறந்த நகைச்சுவையாகும். இது ரசிகர்களை கிரிக்கெட்டை விடுத்து வெவ்வேறு விளையாட்டுகளை பார்க்க வைத்துவிடும். ஒரு சாதாரண அணி, பலம் பொருந்திய அணியுடன் மோதும் போது, போட்டியின் முடிவை விட, அந்த சாதாரண அணி என்ன கற்றுக் கொண்டது என்பதைத் தான் பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இந்தத் தொடரில் அப்படி ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானால் தொடர்ந்து டாமினேட் செய்யப்பட்டதே தவிர, புதிதாக எதையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இதன் பிறகு ஜிம்பாப்வே அணி டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
இதே கருத்தை வலியுறுத்திய பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஷீத் லத்தீஃப், "இந்த தொடர் எதற்காக நடத்தப்பட்டது? நோக்கம் என்ன? பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது நல்லது. ஆனால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் வலுவான அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும். அவர்களுடன் விளையாட பயப்படக் கூடாது. நாம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் விளையாடும் போது, டெஸ்ட் போட்டிகளை அதிகரியுங்கள். ஏனெனில், இந்த அணிகளுடன் விளையாடுவதை மக்கள் விரும்புகிறார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராகவும் விளையாடுவதில்லை. ஆகையால், மீதமிருக்கும் ஐந்தாறு பலமான அணிகளுடனாவது நாம் விளையாட வேண்டும்" என்றார்.
ஆனால், இதில் ஒரு ரசிகனாக நாம் பார்க்கும் விஷயம் என்னவெனில், இந்த ஜிம்பாப்வே சீரிஸில் கூட, ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருக்கிறது. பலம் குறைந்த அணியுடன் ஏன் விளையாட வேண்டும்? என்று கேள்வி எழுப்பும் ரமீஸ் ராஜா, பாகிஸ்தானின் இந்த தோல்வி குறித்தும் பேசியிருந்தால் நியாயமாக இருந்திருக்கும்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும், ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருந்தது. அந்த போட்டியில், 90% புதிய வீரர்களை கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்காவுடன் பலம் வாய்ந்த பாகிஸ்தான் தோற்றது. இப்போது ஜிம்பாப்வேயுடனும் தோற்றிருக்கிறது. டி20 உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாகிஸ்தான் தனது டி20 அணியில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் நிறைய உள்ளன. அதற்கு ஜிம்பாப்வே சீரிஸும் ஒரு உதவியாக பாகிஸ்தானுக்கு அமைந்தது என்பதே உண்மை.