‘4 நாளா காய்ச்சல்’.. ‘இப்போ எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கு’!.. இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் கேப்டன் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால், அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போது தொடர்ச்சியாக ஹர்மன்ப்ரீத் கவுருக்குப் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் கொரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 32 வயது ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 104 ஒருநாள், 114 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாடினார். இதனை அடுத்து நடைபெற்ற டி20 தொடரில் காயம் காரணமாக ஹர்மன்பிரீத் கவுர் பங்கேற்கவில்லை.
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) March 30, 2021
இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். அதில், ‘எதிர்பாராத விதமாக எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இருப்பினும் எனது மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த 7 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். உங்கள் அன்பினாலும், கடவுளின் அருளினாலும் பூரண குணமடைந்து களத்திற்கு திரும்புவேன்’ என அவர் பதிவிட்டுள்ளார்.