‘இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே’.. ரசிகர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த ஆஸ்திரேலியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனை நியமித்து அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து வரும் டிசம்பர் 8-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் (Ashes) தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் (Tim Paine) மீதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் புகார் வைக்கப்பட்டது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை டிம் பெய்ன் ராஜினாமா செய்தார். மேலும் இதற்கு மன்னிப்பு கேட்ட அவர், தன்னால் அணிக்கு இனியும் எவ்வித இழுக்கும் வரவேண்டாம் என கூறி விலகினார். அதனால் உடனடியாக அணிக்கு புதிய கேப்டனை தேர்ந்திருக்க வேண்டிய சூழல் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டது
இந்த நிலையில் அணியில் உள்ள முன்னணி வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரில் யாருக்காவது கேப்டன் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸிக்கு (Pat Cummins) டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
JUST IN: Pat Cummins is officially the 47th captain of the Aussie Men's Test team #Ashes
— cricket.com.au (@cricketcomau) November 26, 2021
பேட் கம்மின்ஸ் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக இருந்துள்ளார். அதனால் ஆஷஸ் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு புதிய டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல் ஸ்டீவன் ஸ்மித் (Steve Smith) துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் நம்பர்.1 பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.