'2 போட்டியிலாச்சும் தோனிக்கு தடை விதிச்சிருக்கனும்.. இந்திய அணிக்காக விளையாடும்போது இப்படி அவர் இப்படி இல்ல'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 14, 2019 01:56 PM
ஜெய்ப்பூரில் நடந்த 12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியதில் சென்னை அணியின் கேப்டனும், தல’யுமான தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்ட தொடக்கத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் 152 என்கிற இலக்குடன் இறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆனால் முன்னதாக கடைசி ஓவரில் சான்ட்னர் எதிர்கொண்ட பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றதால், லெக் அம்பயர் , நோ-பால் கொடுத்தார். எனினும் இந்த நோ பாலை ஸ்டிரைட் அம்பயர் ரத்து செய்தார். இந்த குழப்பங்களுக்கு இடையில் ஒரு முடிவு எடுத்து இறுதியாக நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிரவுண்டுக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, இதனைக் கண்டதும் இறங்கி வந்து ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள் என்று ஆக்ரோஷமாக கேட்டு வாதம் செய்யத் தொடங்க, பென் ஸ்டோக்ஸுக்கும் தோனிக்கும் இடையில் வாக்குவாதம் சூடாகி, நோபால் தராத நடுவர்களின் மீதான கோபத்துடன் தோனி வெளியேறினார். இதனால் தோனிக்கு லெவல் 2 வகையறா விதிமீறலை கண்டித்து அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், தோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாடுவதில் இருந்து செய்திருக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தோனி இந்திய அணிக்காக இப்படி நடந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருக்கலாம், ஆனால் அவர் சென்னை அணிக்காக விளையாடும்போதுதான் இவ்வாறு சற்று கூடுதலாக உணர்ச்சிவசப்படுவதாகக் கருதத் தோன்றுகிறது. மைதானத்தில் சென்னை வீரர்கள் இருவர் ஏற்கனவே நிற்கும்போது, இந்த பிரச்சனை பற்றி பேசுவதற்கு தோனி உள்ளே இறங்கியிருக்க கூடாது. வேண்டுமென்றால் மைதானத்தினுள் இருந்த சென்னை வீரர்கள் 4வது அம்பயரிடம் வாக்கி டாக்கியில் பேசியிருக்கலாம்.
இப்படி செய்த அவருக்கு அடுத்தடுத்து 2 போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தால் இது அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்திருக்கும். அவ்வாறு செய்யாததால் நாளை அனைத்து கேப்டன்களும் இதுமாதிரி இறங்குவார்கள் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். முன்னதாக தோனியும் மனிதர்தானே என்று தோனியின் செயலை ஆதரித்து முன்னாள் வீரர் கங்குலி பேசியிருந்த நிலையில், சேவாக் தோனி பற்றி இப்படி ஒரு கருத்து கூறியுள்ளது பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
