"இந்த விஷயத்துல 'ரோஹித்' ரொம்ப கெட்டிக்காரரு.. அவரு இருந்தாலே எங்களுக்கு 'பிரச்சன' இருக்காது.." பாராட்டித் தள்ளிய 'ஷமி'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டனாக, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் செயல்பட்டு வருபவர் விராட் கோலி. அவரது தலைமையில், இந்திய அணி கடந்த காலங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இருந்த போதும், ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டனாக வலம் வரும் ரோஹித் ஷர்மாவை, இந்திய அணியின் டி 20 கேப்டனாக மட்டும் நியமிக்க வேண்டும் என சமீபத்தில் பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கு காரணம், ஐபிஎல் தொடரில் மும்பை அணி சிறந்து விளங்க மிக முக்கிய காரணமாக இருந்தவர் ரோஹித் ஷர்மா. இதனால், அவர் டி 20 அணிக்கு பொருத்தமான கேப்டனாக இருப்பார் என பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி (Mohammed Shami), ரோஹித்திடம் உள்ள சிறந்த பண்புகள் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'ஒரு பந்து வீச்சாளராக, நாம் சென்று ரோஹித்திடம் ஆலோசனை கேட்டால், அவர் எப்போதும் நம்பிக்கையான பதிலைத் தான் தருவார். அது மட்டுமில்லாமல், எதிரணியின் பேட்ஸ்மேன் எப்படிப்பட்டவர், எப்படி ஆடக் கூடியவர் என்பதை விட, பந்து வீச்சாளரின் மனதில் உள்ள திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துபவர் ரோஹித் ஷர்மா.
ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இத்தகைய நம்பிக்கையை கொடுப்பது தான் முக்கியம் என நான் கருதுகிறேன். ரோஹித் ஷர்மா சற்று வித்தியாசமான குணம் கொண்டவர். பேட்டிங் செய்வதை தவிர்த்து மற்ற நேரத்தில், மிகவும் கூலாக இருப்பார்' என ஷமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கோலி பற்றி பேசிய ஷமி, ஒரு கேப்டனாக அணியை மிகவும் சிறப்பாக கோலி வழி நடத்துவார் என்றும், எதிரணியினரின் விக்கெட்டுகள் விழும் போது, பந்து வீச்சாளர்களை விட, அதனை ஆக்ரோஷமாக கொண்டாடுவதில், கோலி கெட்டிக்காரர் என்றும் ஷமி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
