‘அவரையெல்லாம் அவர் போக்குல விட்றணும்’!.. ‘வேறலெவலா வருவாரு பாருங்க’.. இளம்வீரரை தாறுமாறாக புகழ்ந்த ரோஹித்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅந்த வீரரை அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் என இளம்வீரர் ஒருவரை ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (12.03.2021) முதல் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிசிசிஐ டிவிக்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னணி வீரர் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்த் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி வருகிறார். அவரையெல்லாம் அவரது போக்கில் விட்டுவிட வேண்டும். நிச்சயம் ஒரு நல்ல மேட்ச் வின்னராக அவர் ஜொலிப்பார். அதைவிட்டுவிட்டு அவருக்கு தேவையில்லாத அழுத்தம் கொடுப்பது தவறு.
இந்த விளையாட்டை அவர் ஜாலியாக அனுபவித்து விளையாட, நாம் அவருக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும். அதைதான் அணி நிர்வாகம் செய்து வருகிறது. ஒவ்வொரு தொடராக அவர் பல பாடங்களை கற்று கைதேர்ந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்து வருகிறார்’ என ரோஹித் ஷர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
அதேபோல் சமீபத்தில் பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய வீரருமான கங்குலி ரிஷப் பந்தை பாராட்டியிருந்தார். அதில், ‘ரிஷப் பந்த்தை அருகில் இருந்து கண்காணித்து வருகிறேன். அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். எனக்கு வெற்றியாளர்கள் மீது எப்போதுமே மிகுந்த நம்பிக்கை உண்டு. அவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும்போது தனியாளாக இருந்து போட்டிகளை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்வார்கள்.
இத்தகைய வெற்றியாளர்களைதான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய காலகட்டத்தில் இத்தகைய திறமைகளுடன் சேவாக், எம்.எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இருந்தனர்’ என கங்குலி கூறியிருந்தார்.
மேலும் ரிஷப் பந்த் ஆடும் போட்டிகளில் எதிரணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவுதான் என கங்குலி புகழ்ந்து கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது சதம் அடித்து அணியின் சரிவை ரிஷப் பந்த் மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.