"அப்பா சாகறதுக்கு முன்னாடி, என்கிட்ட கடைசியா பேசுனது இத பத்தி தான்.." உருக்கத்துடன் க்ருணால் பாண்டியா பகிர்ந்த 'விஷயம்' .. மனதை நொறுங்க வைத்த 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
அனைத்து அணி வீரர்களும் ஐபிஎல் தொடருக்ககு வேண்டி தயாராகி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியா, தனது வாழ்க்கை பயணத்தில், தந்தையின் பங்கு என்ன என்பது பற்றியும், தந்தையின் மறைவுக்கு முன்பாக தன்னிடம் கடைசியாக பேசியது என்ன என்பது பற்றியும் உருக்கத்துடன் உரையாடிய வீடியோ ஒன்றை, மும்பை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் பேசிய க்ருணால் பாண்டியா, 'இந்த வாழ்க்கையில் நான் உணர்ந்த விஷயம் என்னவென்றால், நான், ஹர்திக் மற்றும் எனது குடும்பத்தினர் ஆகியோருக்கு கிடைத்த வாழ்க்கைக்கு பின்னால் இருப்பது எனது தந்தையின் கடின உழைப்பும், போராட்டங்களும், தியாகங்களுமே ஆகும். அவர் விதைத்த மரத்தில் மலர்ந்தவர்கள் தான் நானும், ஹர்திக் பாண்டியாவும்.
அவர் இல்லாத நேரத்தில், என்னைச் சுற்றி நல்ல விஷயங்கள் நடக்கும் போது, எனது இதயத்தின் ஒரு பகுதி அவருடன் சென்று விட்டதாக நான் உணர்கிறேன். எனது தந்தை இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, சையது முஷ்டாக் அலி தொடரில் நான் ஆடியதை பார்த்து விட்டு, என்னை அழைத்து பேசினார்.
அப்போது அவர், "நீ பேட்டிங் செய்ததை நான் பார்த்தேன். ஆறு வயதில் இருந்து நீ கிரிக்கெட் ஆடுவதை நான் பார்த்து வருகிறேன். ஆனால், ஒன்றை நான் இப்போது சொல்கிறேன். உனக்கான நேரம் விரைவில் வரும்" என கூறினார்.
நான் முதலில் அவர் கூறியதை வேடிக்கையாக எடுத்தேன். தொடர்ந்து, அவரிடம், "அப்பா, நான் 5 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறேன். இந்திய அணிக்காகவும் ஆடி விட்டேன். நான் சிறப்பாகவும் ஆடி வருகிறேன். நாங்கள் ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி விட்டோம். இதற்கு மேல் என்ன இருக்கிறது?" என்ற தொனியில் நான் பதில் கூறினேன்.
இதற்கு எனது தந்தை, "இதுவரை நீ செய்ததெல்லாம் சிறந்தது தான். ஆனால், உனக்கான நேரம் இனிமேல் தான் வரப் போகிறது என்பதை நான் உணர்கிறேன்" என கூறினார். அது தான் நான் அவரிடம் கடைசியாக பேசியது. அடுத்த இரண்டு நாட்களில் அவர் மறைந்து விட்டார். எனது தந்தை மறைந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இப்போதும் அவர் என்னுடன் இருப்பதை போலவே நான் உணர்கிறேன்' என உருக்கத்துடன் க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.
🗣️ "Me and Hardik are just reaping the fruits of his efforts." @krunalpandya24 opens up on the influence of his father in #MI catch-up! #OneFamily #MumbaiIndians #IPL2021 pic.twitter.com/479vh912iH
— Mumbai Indians (@mipaltan) April 5, 2021
க்ருணாலின் தந்தை கூறியதைப் போலவே, சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமான க்ருணால் பாண்டியா, தனது முதல் ஒரு நாள் போட்டியிலேயே அதிரடியாக ஆடி, அறிமுக போட்டியில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் படைத்திருந்தார்.
தொடர்ந்து, போட்டிக்கு பின் தனது சாதனையை பற்றி பேசிய போது, தந்தையின் மறைவை எண்ணி, ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உடைந்து அழுதது குறிப்பிடத்தக்கது.