‘அதை மனசுல வச்சுக்க வேண்டிய அவசியமே இல்ல.. நீங்க எப்பவும் போல விளையாடுங்க’.. கோலிக்கு முன்னாள் வீரர் கொடுத்த ‘முக்கிய’ அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐசிசி முதல்முறையாக நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, வரும் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுவுள்ளன. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே இப்போட்டியில் விளையாட உள்ள 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இரு அணிகளும் நேற்று அறிவித்தன.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன், கேப்டன் விராட் கோலிக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஐசிசி நடத்தும் தொடர் என்பதால், இதனை நினைத்து விராட் கோலி தன்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்ள கூடாது. மற்ற டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடுகிறாரோ அதேபோலதான் இந்த இறுதிப்போட்டியிலும் அவர் விளையாட வேண்டும்.
இதை கோலி சரியாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டார். அதேபோல் கேப்டனாக ஐசிசி கோப்பையை கைப்பற்ற அவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு’ என விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘விராட் கோலி எப்போதுமே தனது பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நன்றாக உணர்ந்து விளையாடக்கூடியவர். அவர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் இந்திய அணிக்கு ரன்கள் வருவது எளிதாக இருக்கும். இதற்கு முன்பு பல போட்டிகளில் இதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால் இந்த இறுதிப்போட்டியிலும் அவரின் நிலையான பேட்டிங் இந்திய அணிக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது’ என விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக கடந்த 3-ம் தேதி இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது தனிமைப்படுத்துதல் முடிவடைந்துள்ள நிலையில், தங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.