WTC FINAL: அந்த ரெண்டு பேர்ல யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்..? ஒரே ஒரு ‘செல்ஃபி’ எடுத்து மறைமுகமாக பதில் சொன்ன கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் வரும் ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். அதில் சுப்மன் கில், ரிஷப் பந்த், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரில் யார் களமிறக்கப்படுவார்கள்? என விவாதம் நடைபெற்று வருகிறது. அதில், பலரும் இருவருக்குமே ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பயிற்சி ஆட்டத்தில் இருவருமே சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் முகமது சிராஜ் மற்றும் இஷாந்த் ஷர்மாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ‘இவர்கள் ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்’ என இருவரையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருவரும் இடம்பெறுவார்கள் என்பதை கோலி மறைமுகமாக குறிப்பிடுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூஸிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் நியூஸிலாந்து அணி விளையாடும் என கருதப்படுகிறது.
These quicks are dominating everyday 👍🇮🇳 @mdsirajofficial @ImIshant pic.twitter.com/anUrYhgaRu
— Virat Kohli (@imVkohli) June 14, 2021

மற்ற செய்திகள்
