‘ஏலத்துல எடுத்து அவருக்கு சில வேலையை ஒதுக்கியிருக்கோம்’!.. ‘பக்காவா முடிச்சு கொடுத்துட்டார்’.. இளம்வீரரை புகழ்ந்து தள்ளிய கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய கோலி, இளம்வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்களும், கேப்டன் விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 54 ரன்களும், மணீஷ் பாண்டே 38 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஷபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளும், கைல் ஜேமீசன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ‘வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், இந்த வெற்றியால் நாங்கள் உற்சாகத்தின் உச்சிக்கெல்லாம் செல்லவில்லை. எங்களிடம் நல்ல திட்டமிடல் இருந்தது. டெல்லி அணியிலிருந்து ஹர்சல் படேலை ஏலத்தில் எடுத்தோம். அவருக்கு குறிப்பிட்ட பணியை ஒதுக்கி இருக்கிறோம். அவரும் தனது பங்களிப்பைச் சரியாகச் செய்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அணியில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை வைத்துக்கொண்டு விளையாடியது எங்களுக்கு பெரிதும் உதவியது. இந்த வெற்றியால் நான் பெருமைப்படுகிறேன். கைவிட்டு போன ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினோம். கூடுதலாகப் பந்துவீச்சாளரை வைத்திருந்தது பல வகையில் உதவியது’ என விராட் கோலி கூறினார்.
இதனைத் தொடர்ந்து, குறைவான இலக்கை ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்த பின் அணியினரிடம் கூறிய அறிவுரை குறித்து பேசிய கோலி, ‘நாம் 149 ரன்களை போராடித்தான் எடுத்திருக்கிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என வீரர்களிடம் தெரிவித்தேன். நமக்கு இந்த 149 ரன்கள் சேர்க்க கடினமாக இருந்தால், நிச்சயம் எதிரணிக்கும் அது கடினமாகத்தான் இருக்கும். அழுத்தமான, நெருக்கடியான நேரங்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். பந்து பழையதாகிவிட்டதால் வீச சற்றுக் கடினமாக இருந்தது. மேக்ஸ்வெல் இன்னிங்ஸ் எங்களுக்கு உதவியாக இருந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
