‘நான் பேட்டிங் செஞ்சா எப்படி பீல்டிங் செட் பண்ணுவார் தெரியுமா..?’ ஐபிஎல்-ல் தோனி போட்ட ‘மாஸ்டர்’ ப்ளானை சொன்ன மார்கஸ் ஸ்டோனிஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (Marcus Stoinis) தி கிரேடு கிரிக்கெட்டர் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது ஐபிஎல் (IPL) தொடரின் போது சிஎஸ்கே (CSK) கேப்டன் தோனியிடம் (Dhoni) பேசியது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘தோனி நேர்மையாக பேசினார். எனது ஆட்டம் குறித்து நன்றாக தெரிந்து வைத்துள்ளார். நான் பேட்டிங் செய்ய வரும்போது எப்படி பீல்டிங் அமைத்தேன் என வெளிப்படையாவே கூறினார். அவர் என்னை புகழ்ந்தாரா அல்லது கிண்டல் செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நான் அதை புகழ்ச்சியாவே எடுத்துக்கொண்டேன்’ எனக் கூறிவிட்டு மார்கஸ் ஸ்டோனிஸ் சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சில வீரர்கள் பொறுப்புடன் நின்று கடைசி வரை விளையாடுவார்கள். ஒரு சிலர் இறங்கியவுடனேயே அதிரடியாக ஆடி அவுட்டாகி செல்வார்கள். இதில் நான் முதல் ரகம் என தோனி கூறினார். அதனால் நான் களமிறங்கியதும், ரன்களை கட்டுப்படுத்துவதற்காக பீல்டிங்கை அமைப்பாராம். ஒருவேளை நான் அடித்து ஆட ஆயத்தமானால், பீல்டர்களை பின்னால் நகர்த்துவாராம். ஆனால் மற்ற வீரர்களுக்கு இப்படி செய்யமாட்டேன் என தோனி கூறினார். அதற்கான காரணத்தையும் அவர் கூறினார்.
சில வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆடுவார்கள். அவர்களை அப்படியே விட்டு விடுவேன் அல்லது அவுட்டாக்க வியூகம் வகுப்பேன் என தோனி கூறினார். நம் பலவீனத்தை சரிசெய்ய வேண்டும், அதேவேளையில் நமது பலத்தையும் இழந்துவிடக் கூடாது என தோனி அறிவுரை வழங்கினார். அதாவது, ஷார்ட் பிட்ச் பந்தை நன்றாக ஆட தீவிரமாக பயிற்சி எடுப்போம், ஆனால் ஃபுல் லெந்த் பந்தை எப்படி ஆடுவது என மறந்து விடுவோம். இதைத்தான் தோனி கூறினார். அவரிடம் இருந்து கற்றது எனக்கு பெரிய அளவில் உதவுகிறது’ என மார்கஸ் ஸ்டோனிஸ் கூறியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக மார்கஸ் ஸ்டோனிஸ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
