'அப்பா என்கிட்ட அந்த விஷயத்தை பண்ணுனு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்...' 'அப்பா இருந்து இத பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷ பட்டிருப்பாரு...' - மன்தீப் சிங் உருக்கம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஷார்ஜாவில் நடந்த நேற்றைய ஐபிஎல் டி-20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.
இந்தப் போட்டியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மன்தீப் சிங் (66 ரன்கள்), கெயில் (51 ரன்கள்) ஆகியோரின் ஆட்டம் முக்கியக் காரணம் ஆகும். இதில் மன்தீப் சிங் 66 ரன்களுடன் போட்டி முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்புதான் மன்தீப் சிங்கின் தந்தை ஜலந்தரில் காலமானார். ஆனால் பயோ-பபுளில் இருப்பதால், தந்தையின் இறுதிச்சடங்கிற்கு நேரடியாக செல்லாமல், காணொலி மூலம் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.
தந்தை இறந்த தினத்திலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மன்தீப் விளையாடினார். இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த நிலையில் வானத்தை நோக்கிப் பார்த்து தனது தந்தைக்கு கண்ணீருடன் மன்தீப் சிங் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து மன்தீப் சிங் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,
''ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டமிழக்காமல் இருந்து, அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். அவரின் ஆசையைத்தான் இந்தப் போட்டியில் நான் நிறைவேற்றினேன். கடைசிவரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றேன்.
நான் இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன் கே.எல் ராகுலிடம் சென்று, என் விருப்பப்படி விளையாட விடுங்கள். கூடுதலாக பந்துகள் எடுத்துக்கொள்வேன். ஆனால், போட்டியில் கண்டிப்பாக வெற்றியைத் தேடித் தந்துவிடுவேன் என்று வாக்குறுதி அளித்தேன்.
இந்தப் போட்டியில் கடைசிவரை நான் ஆட்டமிழக்காமல் வெற்றி பெற செய்தேன். இந்நேரம் என் தந்தை இருந்திருந்தால் கண்டிப்பாக மிகவும் மகிழச்சி அடைந்திருப்பார்.
கிறிஸ் கெயில் ஆடுகளத்துக்கு வந்த பிறகு வெற்றி பெறுவது என்பது எளிதானது. நீங்கள் ஒருபோதும் தளர்வாக கூடாது என்று அவரிடம் நான் தெரிவித்தேன். கெயில் ஒருபோதும் பேட்டிங்கில் தடுமாறியதாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து டி20 போட்டியில் மிகச்சிறந்த வீரர் கெயிலாகத்தான் இருப்பார். கடந்த 2010-ல் கொல்கத்தா அணியில் கெயிலுடன் விளையாடத் தொடங்கினேன்.
அவர் எனக்கு நண்பராக அறிமுகமானது என்னுடைய அதிர்ஷ்டம் என்பேன். கெயில் மிகவும் பணிவானவர், நட்புடன் பழகுவார். நாங்கள் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் குறைவாக இருந்ததால்தான் சில போட்டிகளில் தோல்வி அடைந்தோம். ஆனால், ஆரம்பத்திலிருந்தே சிறந்த கிரிக்கெட்டைத்தான் வெளிப்படுத்தினோம். ஆனால், வெற்றிக்கு அருகே கொண்டு சென்று முடிக்க முடியவில்லை.
கடந்த ஐந்து போட்டிகளாக நாங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் எவ்வாறு போராடுகிறோம் என்பதுதான் முக்கியம். இப்போது எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ஷ்டம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்''. என மன்தீப் சிங் கூறியுள்ளார்.