"மேட்ச் ரிசல்ட் என்னவா இருந்தாலும் சரி... நாங்க நிஜமாகவே கொடுத்து வச்சிருக்கணும்!".. தொடர் தோல்விக்கு பின்... தோனி உருக்கம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு கிடைத்த ரசிகர்களுக்காக நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என தோனி மனம் உருகி பேசியுள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சென்னை அணி முதன் முறையாக தொடர் தோல்விகள் காரணமாக ப்ளேஆப்பில் நுழைவதற்கான வாய்ப்பை இழந்துள்ளது.
எனினும், சென்னை ரசிகர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை சென்னை அணிக்காக சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, "எங்கள் அணிக்கு இது போன்ற ரசிகர்கள் கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய தோனி, "சென்னை அணி ரசிகர்கள் சிறந்தவர்கள். அவர்கள் கிரிக்கெட்டை புரிந்துவைத்திருக்கும் பாங்கு சற்று வித்தியாசமானது. அணியானது மோசமான தருணங்களை எதிர்கொள்ளும் போது அணியுடன் நிற்பவர்களே உண்மையான ரசிகர்கள்.
சென்னை அணி ரசிகர்கள் அணி குறித்து ஏமாற்றமடையாமல் இல்லை; விமர்சனங்களை முன்வைக்காமல் இல்லை. ஆனால், அவை ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள். இதுபோன்ற ரசிகர்கள் எங்கள் அணிக்கு கிடைத்ததிற்கு நாங்கள் உண்மையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஆமாம், சென்னை ரசிகர்கள் நாங்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
கிரிக்கெட்டில் சிறப்பாக செயலாற்ற சில சமயங்களில் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. கிரிக்கெட்டில் நாங்கள் மோசமான தருணங்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் எங்களுடன் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் நாங்கள் யாருடன் விளையாடுகிறோம், எங்கே விளையாடுகிறோம், ஆட்டத்தின் முடிவுகள் என்ன என்றெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து எங்களுடன் எப்போதும் நின்றிருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.