‘மரண பயத்தை காட்டிட்டான் பரமா’!.. அந்த மனுஷன் என்னை அவுட் ஆக்கணும்னு நெனச்சே வீசல.. பும்ரா மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த இங்கிலாந்து வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பவுலிங் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (25.08.2021) நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்துள்ளார். அதில், ‘எனக்கு முன்னால் பேட்டிங் செய்த அனைவரும், பிட்ச் மெதுவாக இருப்பதாக கூறினர். அதனால் நான் கொஞ்சம் கவனமில்லாமல் இருந்துவிட்டேன். நான் பேட்டிங் செய்ய வரும்போது, பும்ரா வழக்கமாக வீசும் வேகத்தில் பந்தை வீசவில்லை என ஜோ ரூட் எச்சரிக்கை செய்தார்.
அவர் சொன்னதுபோலவே அவர் எனக்கு வீசிய முதல் பந்தே 90 மைல்கள் வேகத்தில் வந்தது. இது என் வாழ்நாளில் சந்தித்திராத ஒரு உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. அவர் என்னை அவுட்டாக்க முயற்சி செய்யவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்’ என பும்ரா தன்னை காயப்படுத்தவே அப்படி வீசியதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பம் முதலே பரபரப்பாக காணப்பட்டது. இரு அணி வீரர்கள் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது பவுன்சர் மூலம் இந்திய வீரர்களை அச்சுறுத்தியே வந்தார். அதிலும் பும்ரா பேட்டிங் செய்தபோது அவரை தாக்கும் விதமாகவே பவுலிங் வீசினார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது பும்ரா பவுன்சரை மழை பொழுந்தார். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்தபோது, தான் வழக்கமாக வீசும் வேகத்தை விட அதிகமாகவே பும்ரா பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.