‘என்ன தல இப்படி சொல்லிட்டீங்க’!.. அவரை ஆஃப் பண்ற சாக்குல சைலண்ட்டா கோலிக்கு ‘ஆப்பு’ வைத்த சேவாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை முன்னாள் வீரருக்கு பதிலடி கொடுக்கும் சாக்கில் கோலியை சேவாக் சீண்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 36.4 ஓவர்களில் 263 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.
இந்த தொடர் ஆரம்பிக்கும் முன், இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரணதுங்கா, இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில் பி டீமை அனுப்பி இந்தியா தங்களை அவமானம் செய்துவிட்டதாக கூறி, இந்திய இளம் வீரர்களை மட்டம் தட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரணதுங்காவின் கருத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘ரணதுங்கா இந்திய அணியைப் பற்றி தெரியாமல் பேசியிருக்கிறார். நீங்கள் வேண்டுமானால் இந்த இளம் அணியை பி டீம் என கருதலாம். ஆனால் எங்களால் இதேபோல் இன்னொரு அணியை கூட வலுவாக கட்டமைத்து இலங்கைக்கு அனுப்ப முடியும். அந்த அளவிற்கு தற்போது இந்திய அணி பலமாக உள்ளது’ என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ‘இப்போது இருக்கும் இந்த அணியை வைத்து இங்கிலாந்தில் இருக்கும் கோலியின் அணியை கூட வீழ்த்த முடியும்’ என சேவாக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது விராட் கோலியின் தலைமையிலான அனுபவம் வாய்ந்த அணியை குறைத்து மதிப்பிடுவது போன்று உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
