‘எங்க தலைக்கு தில்ல பாத்தியா..!’.. ஒரே ஒரு ‘பஞ்ச்’ டயலாக்கில் இங்கிலாந்தை பங்கமாய் கலாய்த்த கவாஸ்கர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது குறித்து சுனில் கவாஸ்கர் கிண்டலாக கருத்து தெரித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில், கேப்டன் ஜோ ரூட் அதிரடியால் 391 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை விட அந்த அந்த அணி 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதில் புஜாராவும் (45 ரன்கள்), ரஹானேவும் (61 ரன்கள்) மட்டுமே சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். இதனை அடுத்து கடைசி நாள் ஆட்டத்தில் முகமது ஷமி-பும்ரா ஜோடி பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 90 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது.
அதில் முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இதனால் இந்தியா 298 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இப்போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இங்கிலாந்து அணியின் யுக்தி மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. அவர்களின் ஒன் டவுன் பேட்ஸ்மேனான ஹசீப் ஹமீட் எப்போது பதட்டமாகவே இருக்கிறார். அவுட்டாகி விடுவோமா என்ற பயத்திலேயே அவர் விளையாடுகிறார். அதனால் அனைவரது பார்வையும் ஜோ ரூட் பக்கமே திரும்புகிறது.
ஜானி பேர்ஸ்டோவை பொறுத்தவரை பேட்டிங்கிற்கு ஏற்ற சூழல் இருந்தால் அடிக்கிறார், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் போகிறார். ஜோஸ் பட்லர் ஒரு சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நன்றாக விளையாட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை’ என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘பந்துவீச்சை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். சொல்லப்போனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டும்தான் இருக்கிறார். வேறு யாரும் சிறப்பாக வீசியதை நான் பார்க்கவில்லை. ட்ரெண்ட் பிரிட்ஜில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை வைத்து பார்க்கும் போது, இங்கிலாந்து வெறும் இரண்டரை வீரர்களை (ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், ராபின்சன்) மட்டுமே நம்பியிருக்கும் அணி என்று தெரிகிறது’ என இங்கிலாந்து அணியை கவாஸ்கர் கலாய்த்தார்.
மேலும் பேசிய அவர், ‘மீதமுள்ள 3 போட்டிகளிலும் இந்தியா வெல்லும் என்று நினைக்கிறேன். தொடரின் தொடக்கத்தில் இந்தியா 4-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றிபெறும் என்று நான் கூறியிருந்தேன். மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்தால், நிச்சயம் நான் சொன்னது நடக்கும் என நம்புகிறேன்’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.