‘போதும்டா சாமி.. போன மேட்ச்ல பட்டதே போதும்’.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு.. இங்கிலாந்து கேப்டன் எடுத்த முடிவு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ பைடன் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்று டிராவும், மற்றொன்றில் இந்தியா வெற்றியும் அடைந்துள்ளது. அதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (25.08.2021) ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இப்போட்டியில் விளையாட உள்ளது குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், ‘3-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோமோ அதை செயல்படுத்த முனைப்பு காட்டுவோம். அதனால் கவனச்சிதறல் ஏற்படுத்தும் விஷயங்களில் இருந்து விலக விரும்புகிறோம். நேர்மையற்ற விதமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம். எங்களுக்கு நாங்களே உண்மையாக இருப்போம். தனிநபர்களாகவும் ஒரு அணியாகவும் உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
விராட் கோலியின் அணி எப்படி விளையாடினாலும், நாங்கள் களத்தில் நல்லபடியாகவே செயல்பட முடிவெடுத்துள்ளோம். களத்தில் எப்போதும் வாய் வார்த்தைகள், மோதல்கள் இருக்கவே செய்யும். ஆனால் கடந்த டெஸ்ட் போட்டியில் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொண்டோம். அந்தப் போட்டியில் சில பகுதிகளை வேறு விதத்தில் கையாண்டிருக்கலாம். கேப்டனாக நான் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்திருக்க வேண்டும். இன்னும் 3 போட்டிகள் இந்த பெரிய தொடரில் இருக்கின்றன. நாங்கள் வலுவாக மீண்டெழ விரும்புகிறோம். அதனால் அனாவசியமான வார்த்தை மோதலில் ஈடுபடுவதை தவிர்ப்போம்’ என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிகழ்ந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய வீரர்கள் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தார். இதற்கு விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
அதேபோல் 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் முகமது ஷமி, பும்ராவும் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வி பெறும் நிலையில் இருந்தது. அதனால் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை சீண்டினார். அப்போது பதிலுக்கு பும்ராவும் அவரை திட்ட, போட்டி பரபரப்பானது.
அதுவரை நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த முகமது ஷமி-பும்ரா கூட்டணி, திடீரென அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் அடுத்தடுத்து பவுண்டரிகள் பறந்தன. இதனை இங்கிலாந்து வீரர்கள் எதிர்பார்க்கவில்லை. கடைசி வரை இந்த ஜோடியை இங்கிலாந்து அணியால் பிரிக்க முடிவில்லை. இதனை அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
ஜெயிக்க வேண்டிய போட்டியை, தேவையில்லாமல் இந்திய வீரர்களை சீண்டி தோல்வி அடைந்ததாக இங்கிலாந்து அணியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனை தவிர்க்கவே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.