'அடுத்த தோனியா?.. அடுத்த கில்கிறிஸ்டா'?.. சச்சின் பார்வையில்... ரிஷப் பண்ட் யாரை பிரதிபலிக்கிறார்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அடுத்த தோனியா? அல்லது அடுத்த கில்கிறிஸ்டா? என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை சவுத்தாம்டனில் நடைபெறவிருக்கிறது.
இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறுவதற்கு பெரும் உதவியாக இருந்த ரிஷப் பண்ட், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாது இருந்த பண்ட், ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 274 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 68.50 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 270 ரன்கள் அடித்தார். அந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இவர் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
மேலும், பேட்டிங்கிலும் சரி, விக்கெட் கீப்பிங் செய்வதிலும் சரி, ரிஷப் பண்ட்-ன் வேகமும், ஆக்ரோஷ ஆட்டமும் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட் அடுத்த தோனியாக உருவெடுப்பார் என்று ஒரு சிலரும், அவர் 2வது கில்கிறிஸ்ட் என்று ஒரு சிலரும் புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் வீரர்கள் சிலரே பண்ட்-ஐ அடுத்த தோனி என ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "எனக்கு ஒருவருடன் இன்னொருவரை ஒப்பிடுவது பிடிக்காத ஒன்று. ஒவ்வொரு வீரருக்கும் தனி அடையாளம் உள்ளது. தான் அடுத்த கில்கிறிஸ்ட்டாக இருக்க வேண்டும் என ரிஷப் பண்டே நினைக்க மாட்டார். ஒவ்வொருவரும் தனக்கென தனி அடையாளம் அமைக்க எண்ணுவார்கள். ரிஷப் பண்ட்-ம் அப்படிதான் நினைப்பார்.
அவரின் தனிப்பட்ட ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. கடந்த சில தொடர்களில், அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அட்டகாசமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தன் ஆட்டத்தை மேம்படுத்திக்கொண்டே வருகிறார். மேலும், அனுபவம் பெற பெற ரிஷப் பண்ட், தான் சற்று நிதானமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்வார். ஆனால், எந்தவித பயமும் இன்றி நம்பிக்கையுடன் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷ ஆட்டத்தை பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பதால், ரிஷப் பண்ட் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த சில தொடர்களில் காட்டிய அதே அதிரடியை நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் ரிஷப் பண்ட் காட்டினால், நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.