பறிபோகிறதா கோலியின் கேப்டன் பதவி!?.. கடுமையாக சாடும் வல்லுநர்கள்!.. பெங்களூரு அணியில் என்ன தான் பிரச்னை?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணியுடனான மோசமான தோல்வியை அடுத்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தலைமைப் பொறுப்பை மூத்த வீரர் ஆரோன் ஃபின்ச்-சிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்துக்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.
2012 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதலே கோலியின் தலைமையில் விளையாடி வரும் ஆர்.சி.பி, 2015 ஆம் ஆண்டு 3 ஆவது இடம் வரையிலும், 2016 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரையும் முன்னேறியது. அதன் பின்பு ஆர்.சி.பி அணிக்கு பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. கடந்த 3 சீசன்களில் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி பிடித்த அதிகபட்ச இடமே 6 தான்.
மறுகட்டமைப்பு செய்யப்பட்ட அணியுடன் நடப்பு சீசனின் முதல் போட்டியில் திருப்திகரமான வெற்றியைப் பதிவு செய்த அவ்வணி நிலைமை இரண்டாவது போட்டியில் நிலைமை தலை கீழாகி விட்டது.
இந்நிலையில், விராட் கோலியின் தலைமைத்துவத்தின் மேலே விமர்சனங்கள் வரிசை கட்டத் தொடங்கிவிட்டன. பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்திய விதம் மோசமாக இருந்ததாக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் திறன் கொண்ட வாஷிங்டன் சுந்தரை, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 8 ஆவது ஓவரில்தான் பந்து வீச கோலி அழைத்தார்.
8 ரன்களை மட்டுமே சுந்தர் அந்த ஓவரில் விட்டுக் கொடுத்த நிலையில், அவரை மீண்டும் பயன்படுத்தாமல் அந்த இடத்தில் ரன்களை வாரி வழங்கும் உமேஷ் யாதவை பயன்படுத்தினார், கோலி. மீண்டும் சுந்தருக்கு 12 ஆவது ஓவர் வழங்கப்பட்டது. அப்போது அவர் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ரன் வேகத்தை தடுத்த சுந்தருக்கு அதன் பின்னரும் ஓவர் வழங்கப்படவில்லை.
அதே போல பிளேயிங் லெவன் தேர்விலும் கோலி சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பிடப்படும் வகையிலான திறன்களைக் கொண்ட கீப்பர் பார்த்தீவ் படேல் இருந்தும், பிலிஃபை அணியில் எடுத்தது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பிலிஃபுக்கு பதிலாக மொயின் அலியை ஆடும் லெவனில் எடுத்திருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
இதுபோன்ற அவரது பல முடிவுகள் அணிக்கு சாதமாக அமையாததால் இந்த சீசனில் கோலி தனது தலைமைப் பொறுப்பை ஃபின்ச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய வீரரான ஃபின்ச், தேசிய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். பொறுப்புகளை ஃபின்ச்சிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் கோலி அழுத்தமின்றி விளையாட முடியும் என்று பேசப்படுகிறது.
பேட்டிங்கில் உலகின் தலைசிறந்த ஒருவனாக வலம் வந்தாலும், தலைமைத்துவத்தில் கோலி பல நேரங்களில் சறுக்கல்களையே சந்தித்துள்ளார். நடப்பு சீசனிலும் ஆர்.சி.பி பெரும் ஏமாற்றத்தை சந்திக்கும் முன் கோலி தலைமைப் பொறுப்பை துறந்திட வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.