"நல்லா பண்ணீங்க தம்பி... ஆனா, நமக்கு இல்ல"... 'எதிரணியை மோசமான சாதனையிலிருந்து காப்பாற்றி'... 'படுமோசமான சாதனை படைத்த இளம்வீரர்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஹைதராபாத் அணி வீரர் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த சீசனில் இதுதான் வேகப் பந்துவீச்சாளரான சித்தார்த் கவுலின் முதல் போட்டியாகும்.
இந்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கம் முதலே ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவில் ரன் குவித்து வந்தது. சித்தார்த் கவுல் தன் முதல் ஓவரிலேயே 19 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் அவுட் ஆக, அடுத்து விளையாடிய க்ருணால் பாண்டியா கடைசி நான்கு பந்துகளில் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து 20 ரன்கள் சேர்த்தார். அந்த கடைசி ஓவரில் மட்டும் சித்தார்த் 21 ரன்கள் கொடுத்தார். இதையடுத்து முக்கியமான 2 விக்கெட் வீழ்த்தியுள்ள போதும், மோசமான பந்துவீச்சில் முதல் இடத்தை பெற்றுள்ள சித்தார்த் கவுல் 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்துள்ளார்.
இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஷார்ஜாவில் 4 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து இந்த சீசனின் மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார். இதன்மூலம் அவருடைய மோசமான சாதனையை சித்தார்த் முறியடித்துள்ளார். ஐபிஎல் 2020இல் ஷார்ஜாவில் 200 ரன்கள் எட்டாத முதல் அணியாகும் ஆபத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் சித்தார்த் கவுலின் ஓவர்களால் 208 ரன்கள் எடுத்து அதிலிருந்து தப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
